தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏழு வாரம் நடந்த அமலாக்க நடவடிக்கையில் 14,300 பேரிடம் சோதனை

2 mins read
fbb6829a-1553-4c2e-9320-d970e5150b70
அமலாக்கச் சோதனையில் மின்சிகரெட்டுகள், சட்டவிரோதச் சூதாட்டம், பாலியல் சேவைகள் எனப் பல குற்றச்செயல்களை அதிகாரிகள் முடக்கினர்.  - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிங்கப்பூர் முழுவதும் ஏழு வாரம் நடந்த அமலாக்க நடவடிக்கையில் 14,300க்கும் அதிகமானவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

குற்ற நடவடிக்கைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த அமலாக்கச் சோதனை இவ்வாண்டு மே மாதம் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 7 வரை நடந்தது.

இந்தக் காலகட்டத்தில் 1,230க்கும் மேற்பட்ட அமலாக்க நடவடிக்கைகள் நடந்தன. அதில் 4,000க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சோதனை செய்யப்பட்ட 14,300 பேரில் 2,445 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் 932 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த அமலாக்கச் சோதனையில் மின்சிகரெட்டுகள், சட்டவிரோதச் சூதாட்டம், பாலியல் சேவைகள் எனப் பல குற்றச்செயல்களை அதிகாரிகள் முடக்கினர்.

மேலும் இந்தச் சோதனைகளில் சட்டவிரோதமாகத் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை மாற்றியமைத்தவர்களும் சிக்கினர்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி கார் சேவைகளை வழங்கியவர்களும் அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

சிங்கப்பூர் முழுவதும் நடந்த அமலாக்க நடவடிக்கைக்குக் காவல்துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சுகாதார அறிவியல் ஆணையம், சிங்கப்பூர் சுங்கத் துறை, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் துணையாக இருந்தனர்.

அமலாக்கச் சோதனையில் ஒரு பகுதியாக 15,700க்கும் மேற்பட்ட சுகாதாரப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை பதிவுசெய்யப்படாத சுகாதாரப் பொருள்களாகும். அவற்றின் மதிப்பு $30,350 என்று அதிகாரிகள் கூறினர்.

கேலாங் வட்டாரத்தில் ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதிவரை சோதனை நடத்தப்பட்டது.

அதில் 60க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகள் மற்றும் அதன் தொடர்பான பொருள்கள் சிக்கின.

ஜூன் 16ஆம் தேதி பொங்கோல் வட்டாரத்தில் காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் நடத்திய கூட்டு சோதனையில் எழு தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கேலாங்கிலும் நான்கு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்தச் சாதனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் குறிப்பிடப்பட்டது. இதுதொடர்பாக ஆறு பேருக்கு அழைப்பாணைகளும் அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்