புதிய கல்வியாண்டிற்கு உதவி: மாணவர்களுக்கு $250 பற்றுச்சீட்டு வழங்கும் மெண்டாக்கி

புதிய கல்வியாண்டிற்கு உதவி: மாணவர்களுக்கு $250 பற்றுச்சீட்டு வழங்கும் மெண்டாக்கி

1 of 2
படம்: மெண்டாக்கி
படம்: மெண்டாக்கி

24 Nov 2026 - 6:37 pm

2 mins read

புதிய கல்வியாண்டைத் தொடங்கும் மாணவர்களின் ஆரம்பக்கட்டச் செலவுகளைக் குறைத்து, அவர்களின் கல்விப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் ‘பள்ளிக்குத் தயார்’ எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை மெண்டாக்கி அமைப்பு அறிவித்துள்ளது.

வசதிகுறைந்த குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் புதிய முயற்சியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், ஐந்து மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ளதாக மெண்டாக்கி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது.

இந்தத் திட்டத்தின்மூலம் 22,000க்கும் மேற்பட்ட மலாய்-முஸ்லிம் மாணவர்கள் ஆளுக்கு 250 வெள்ளி மதிப்பிலான மின்னணுப் பற்றுச்சீட்டுகளைப் பெறவுள்ளனர். இந்திய முஸ்லிம் மாணவர்களும் இத்திட்டத்தின்வழி பயன்பெறலாம். 

தகுதிபெறும் ஒவ்வொரு மாணவர்க்கும் வழங்கப்படவுள்ள அப்பற்றுச்சீட்டுகளைக் கொண்டு பாடநூல்கள், கற்றல் துணைக்கருவிகள் போன்ற பள்ளி தொடர்பான செலவுகளைக் குடும்பங்கள் சமாளிக்க முடியும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் உதவி

உதவி குடும்பத்திற்கு ஒன்று என்றில்லாமல், தகுதிபெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியே உதவி வழங்கப்படும் என்பதே இத்திட்டத்தின் சிறப்பு. 

ஒரு குடும்பத்தில் தகுதிபெறும் மூன்று குழந்தைகள் இருந்தால், அந்தக் குடும்பம் $750 பெறுமதியுடைய பற்றுச்சீட்டுகளைப் பெறும். ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு இது பேருதவியாக அமையும்.

இந்த உதவித்திட்டம் குறித்துப் செய்தியாளர்களிடம் பேசிய முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் மெண்டாக்கி அமைப்பின் தலைவருமான ஸாக்கி முகம்மது, பள்ளி ஆண்டின் தொடக்கம் என்பது பெற்றோருக்குச் செலவுகள் மிகுந்த காலம் என்று குறிப்பிட்டார். 

குறிப்பாக, வாழ்க்கைச் செலவு குறித்த கவலைகள் உள்ள இந்தக் காலத்தில், குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வியாண்டை உற்சாகத்துடன் தொடங்க இத்திட்டம் கைகொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

பள்ளி வழங்கும் நிதியுதவித் திட்டங்களின்கீழ் வராத குடும்பங்களுக்கும் கூடுதல் ஆதரவு தேவைப்படுவதை சுட்டிக்காட்டிய திரு ஸாக்கி, குறைந்த வருமானம் கொண்ட பெற்றோர்களிடம் தாம் நேரில் உரையாடியபோது, அடிப்படைப் பொருள்களைத் தாண்டி கணினிகள், அகராதிகள் போன்ற பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தேவையான துணைக்கருவிகளை வாங்குவதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

அவ்வகையில், அத்தகைய இன்றியமையாத் தேவைகளை நிறைவேற்றி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இந்தப் பற்றுச்சீட்டுகள் பெரிதும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடக்கப் பள்ளி முதல் இளங்கலைப் பட்டப்படிப்பு வரை முழுநேரமாகப் பயிலும் மாணவர்களுக்கான இத்திட்டத்தால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மட்டுமன்றி, மதரசா, சிறப்புக் கல்விப் பள்ளி, தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களும் பயன்பெறலாம் என்றும் மெண்டாக்கி விவரித்தது. 

குடும்பத்தின் தலைக்கணக்கு வருமானம் 1,000 வெள்ளிக்கு மிகாமல் இருக்கும் குடும்பங்கள் இத்திட்டத்தின்கீழ் உதவிபெறுவதற்கு, வரும் டிசம்பர் மாதம் முதலாம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிவரை மெண்டாக்கி இணையத்தளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்
மெண்டாக்கிமுஸ்லிம்ஸாக்கி முகம்மதுசிங்கப்பூர்

தொடர்புடைய செய்திகள்