இந்தியாவுக்குப் பயணம் செய்த ஆடவர் ஒருவரின் பயணப் பெட்டியில் இருந்து 2,500க்கும் அதிகமான ஆமைகள் மீட்கப்பப்பட்டதை அடுத்து அவர் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஆடவர் வைத்திருந்த ஆமைகள் சல்மொனெலா கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவை அனைத்தும் கொல்லப்பட்டன.
அனைத்துலக விலங்குக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் 26 வயது அடைக்கலசாமி வடிவேல், கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகருக்குப் பயணம் மேற்கொண்டதாக ‘தி இந்து’ நாளிதழ் நாளேடு ஜூலை 13 அன்று செய்தி வெளியிட்டது.
பெங்களூரின் கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் ஆடவரைப் பிடித்த சுங்கத் துறை அதிகாரிகள், சரக்குப் பகுதிக்கு அனுப்பப்படும் பயணப் பெட்டியில் ஆமைகளைக் கண்டுபிடித்தனர்.
விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த ஆடவர் ஒருவரிடம் அந்த ஆமைகளைத் தாம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அந்த ஆடவர் கூறியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்திய அதிகாரிகள் சிவப்பு காதுள்ள சிலைடர் (sliders) ரக ஆமைகளைச் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பினர் என்றும் 2,500க்கும் மேற்பட்ட அத்தகைய ஆமைகளில் 300க்கும் மேற்பட்டவை உயிர் பிழைக்கவில்லை என்றும் சிங்கப்பூரின் தேசியப் பூங்கா வாரியம் குறிப்பிட்டது.
உயிர்பிழைத்த ஆமைகள் பின் பூங்கா வாரியத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அங்கு ஆமைகளைச் சோதித்த விலங்குநல மருத்துவர் அவற்றில் சல்மொனெலா நோய்க்கிருமி இருந்ததைக் கண்டுபிடித்தார்.
மனிதர்களிடம் அந்தக் கிருமி காய்ச்சல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, மயக்கம், வாந்தி ஆகிய பல அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். பிள்ளைகள், மூத்தோரிடையே அது உயிர்க்கொல்லி நோயாகக் கூட மாறக்கூடும் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சல்மொனெலா கிருமி உள்ள ஆமைகள் பொதுச் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவை முறையாக அப்புறப்படுத்தப்பட்டன என்று தேசியப் பூங்காக் கழகம் சொன்னது.
சிங்கப்பூரில் சிவப்பு காதுள்ள சிலைடர் ரக ஆமைகளைக் குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் விடுவது சட்டவிரோதம்.