மோசடிக் குற்றங்களுடன் தொடர்புடையவை என்று சந்தேகிக்கப்படும் 300க்கும் அதிகமான ஓசிபிசி வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இருந்த $1.8 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மே மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஓசிபிசி வங்கியுடன் மோசடித் தடுப்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து செயல்பட்டதாக காவல்துறை ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று தெரிவித்தது.
மோசடிக்காரர்களுக்கு உதவும் வகையில் பணப் பரிவர்த்தனைகளில் உதவியோரைக் களையெடுக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வெளிநாட்டவர்களுக்குச் சொந்தமான உள்ளூர் வங்கிக் கணக்குகளில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் அதிகரித்திருந்தாகக் காவல்துறை கூறியது.
மோசடிக் குற்றங்கள் மூலம் பெறப்பட்ட பணம் இந்த வங்கிக் கணக்கில் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஓசிபிசி வங்கியின் தரவுப் பகுப்பாய்வு அணுகுமுறைகளையும் கட்டமைப்புக் கண்டுபிடிப்புச் சாதனங்களையும் பயன்படுத்தி சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளைக் கண்டுபிடித்ததாகக் காவல்துறை கூறியது.
சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட பணத்தை வைத்திருக்க உதவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

