சிங்கப்பூரில் செப்டம்பர் 17ஆம் தேதி மாலை ‘சுமத்ரா புயல்’ காரணமாகத் திடீரென பெய்த கனமழையைத் தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட மரங்கள் சேதமடைந்தன.
பீச் ரோடு, சிலின் அவென்யூ, ஜாலான் மெம்பினா, தீவு விரைவுச்சாலை, மத்திய விரைவுச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்த காணொளிகளும் படங்களும் சமூக ஊடகத்தில் வலம்வந்தன.
ஈசூன் அவென்யூ 7ல், இரவு 7.25 மணிவாக்கில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றின்மீது மரம் திடீரென விழுந்ததைத் தொடர்ந்து, எஸ்பிஎஸ் பேருந்து ஓட்டுநரும் பயணி ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் சுயநினைவுடன் இருந்தனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், 300க்கும் மேற்பட்ட சம்பவங்களில் பெரும்பாலானவற்றில் மரங்களின் கிளைகள் முறிந்ததாக தேசிய பூங்காக் கழகம் கூறியது. இருப்பினும், எத்தனை மரங்கள் விழுந்தன என்பது பற்றி அது தெரிவிக்கவில்லை.
“இடையூறுகளையும் எஞ்சியுள்ள சிதைபொருள்களையும் அகற்ற எங்களின் ஊழியர்களும் ஒப்பந்ததாரர்களும் இரவு முழுதும் செயல்பட்டனர்,” என்று தேசிய பூங்காக் கழகம் கூறியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று, மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப்பகுதியின் மெக்ரிட்சி இயற்கைப் பாதை. அங்கு சில மரங்கள் சரிந்து விழுந்தன.
இதற்கிடையே, மெக்ரிட்சி நீர்த்தேக்கத்தில் உள்ள நடைபாதையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் சோதனைக்காகவும் பழுதுபார்ப்புக்காகவும் மூடப்பட்டுள்ளதாக கழகம் கூறியது.

