மரின் பரேட் வட்டாரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பங்காளித்துவ அமைப்புகளுடன் சேர்ந்து வகுக்கப்பட்டுள்ள $324 மில்லியனுக்குமேல் மதிப்பிலான 140க்கும் மேற்பட்ட திட்டங்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 19) அறிவிக்கப்பட்டன.
புதிய தேர்தல் தொகுதி எல்லைகளின்கீழ், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் சேர்க்கப்பட்ட ஜூ சியட் வட்டாரத்தைச் சேர்ந்த திட்டங்களும் இவற்றில் உள்ளடங்கும்.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இவற்றை அறிவித்தார்.
“பைன் கிளோஸ், யூனோஸ் கிரசண்ட் இரு இடங்களில் புதிய ‘ஸ்போர்ட்ஸ்-இன்-பிரசிங்ட்’ திட்டங்களை அறிவிப்போம்.
“மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சிக் கூடங்களை நகர் முழுதும் நிறுவுவோம். அல்ஜுனிட் கிரசண்ட்டில் நான்கு புதிய சமூக மன்றங்களை அறிமுகப்படுத்துவோம்.
“மரின் பரேட், ஜூ சியட், கெம்பாங்கான், மவுண்ட்பேட்டன் ஆகிய நான்கு வட்டாரங்களில் புதிய சமூக மன்றங்கள் திறக்கப்படும்,” என்றார் டாக்டர் டான்.
புளோக் 267 சிராங்கூன் அவென்யூ 3ல் புதுப்பிக்கப்பட்ட சிராங்கூன் சந்தை இடம்பெறும். அதில் ஈரச்சந்தை, உணவிடங்கள், படிப்பதற்கான இடங்கள் ஆகியவை இடம்பெறும்.
சிங்கப்பூரின் ஆகப்பெரிய பலதுறை மருந்தகமான புதிய சிராங்கூன் பலதுறை மருந்தகமும் திறக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
சிம்ஸ் அவென்யூ, ஜூ சியட் சாலை இரண்டிலும் வட்டாரப் புதுப்பிப்புத் திட்டங்கள் இடம்பெறும்.
கூடுதலான கூரைவேய்ந்த இணைப்புப் பாதைகளும் வாகனம் ஏறி இறங்கும் இடங்களும் கட்டப்படும்.
இளம் பிள்ளைகளைக் கொண்டுள்ள குடும்பங்கள், புதிய நீர் விளையாட்டுப் பூங்காவையும் பல்வேறு சமூக உடற்பயிற்சி இடங்களையும் எதிர்பார்க்கலாம்.
புளோக் 108 அல்ஜுனிட் கிரசண்ட் அருகில் பல தலைமுறையினரும் ஒன்றுகூடுவதற்கு புதிய பூங்கா மெக்பர்சனில் அமைக்கப்படும்.
புளோக் 307 சிராங்கூன் அவென்யூ 2ல் புதுப்பிக்கப்பட்ட தோட்டம் அமையும். புதிதாக வரவுள்ள ஜூ சியட் சமூக மையம், கெம்பாங்கானில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக ஒருங்கிணைந்த கட்டமைப்பு, மரின் பரேட் சமூகக் கட்டடம் ஆகியவை மக்களுக்குப் பல சேவைகளையும் வழங்கும்.
ஜூ சியட்டில் 10.5 கிலோமீட்டர் மிதிவண்டிப் பாதையும் இடம்பெறும்.
நகர விழாவுக்கு நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங், உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராகிம், தென்கிழக்கு வட்டார மேயர் முகமது ஃபஹ்மி அலிமான், சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டின் பெய் லிங், லிம் பியோ சுவான் ஆகியோர் வந்திருந்தனர்.
அவர்களுடன் மக்கள் செயல் கட்சி புதுமுகங்களான வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் டயானா பாங், பொதுச் சேவை விருதைப் பெற்றுள்ள நெடுங்கால கட்சித் தொண்டூழியர் கோ ச கீ இருவரும் வந்திருந்தனர்.