நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (எல்டிஏ) சுற்றறிக்கை ஒன்றில் 350க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் கசிந்ததற்கு மன்னிப்புக் கேட்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றி தொடர்பாக திங்கட்கிழமை (மே 4) அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் ஏராளமான முகவரிகள் தெரிந்ததை அன்று மாலை 5.50 மணியளவில் ‘பிஸினெஸ் டைம்ஸ்’ கண்டறிந்தது.
மின்சார வாகன மின்னேற்றிகளை வாங்க விரும்பும் உரிமையாளர்களுக்கு, அதனைப் பதிவுசெய்ய ‘ஒன்மோட்டோரிங்’ தளத்தின் புதிய மின்னிலக்கச் சேவை குறித்துத் தெரிவிப்பதற்கான சுற்றறிக்கை அது.
ஆணையத்தின் தேசிய மின்சார வாகன மையம் அந்தச் சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது. அதனை அனுப்ப, மின்னஞ்சல் முகவரி பகுதியில் மறைமுக நகல் (bcc) பிரிவைத் தேர்ந்து எடுப்பதற்குப் பதில் அசல் நகல் (cc) அம்சம் தேர்ந்து எடுக்கப்பட்டிருந்ததை ‘பிஸினெஸ் டைம்ஸ்’ கவனித்தது.
அவ்வாறு செய்ததால் அசல் நகலில் இடம்பெற்ற எல்லா முகவரிகளையும் மின்னஞ்சலைப் பெற்ற அனைவராலும் பார்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
அதனை அறிந்ததாலோ என்னவோ, மின்னஞ்சல் முகவரிகளை வெளிப்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டு இரவு 10.44 மணிக்கு மற்றொரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
இதுபோன்ற சேவைகளில் கவனமுடன் இருக்குமாறு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக, தேசிய மின்சார வாகன மையத்தின் மின்வாகன ஒழுங்குமுறை துணை இயக்குநர் லிம் யோங் ஸியான் தெரிவித்துள்ளார்.

