3,800க்கும் மேற்பட்ட சட்டவிரோத சூதாட்டத் தளங்கள்: கா. சண்முகம்

2 mins read
$37 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோதப் பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டன
b0bff361-8cb4-4a1c-bdae-1e3b1d54fa67
சட்டவிதோத சூதாட்டத் தளங்களை காவல்துறைக்கு அடையாளம் காட்டி உதவலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சட்டவிரோதமாக செயல்பட்ட 3,800க்கும் மேற்பட்ட சூதாட்டத் தளங்களை சிங்கப்பூர் உள்துறை அமைச்சு முடக்கியிருக்கிறது. இத்தகைய தளங்கள் சிங்கப்பூரை இலக்காகக் கொண்டு செயல்பட்டன அல்லது சிங்கப்பூரில் உள்ளோர் அத்தகைய இணையத் தளங்களுக்குச் சென்றனர்.

சிங்கப்பூர் பொதுமக்களை சம்பந்தப்பட்ட ஏறக்குறைய $37 மில்லியன் மதிப்புள்ள 145,000க்கும் மேற்பட்ட சட்டவிரோதப் பரிவர்த்தனைகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இல்லையென்றால் இத்தகைய பரிவர்த்தனைகள் மூலம் சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு $37 மில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

இது, 2024ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான நிலவரமாகும்.

“இந்தத் தடுப்பு நடவடிக்கைகளால் இணையம்வழி செயல்படும் சட்டவிரோத சூதாட்டத் தளங்களை மக்கள் பயன்படுத்துவதை ஓரளவு தடுக்க முடிந்தது. ஆனால் சட்டவிரோத நடத்துநர்கள் எளிதாக புதிய சூதாட்டத் தளங்களை உருவாக்க முடியும். ஒவ்வொரு சூதாட்டத்தளத்தை தெரிந்துகொள்ளும் வசதி தற்போது எங்களிடம் இல்லை,” என்று புதன்கிழமை (ஜனவரி 8) புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இயோ சூ காங் தனித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங், சிங்கப்பூரில் தடுக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட சட்டவிரோத சூதாட்டத் தளங்கள், செயலிகளின் எண்ணிக்கையைப் பற்றி எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் சட்டவிரோத சூதாட்டத் தளங்கள், செயலிகள், விளம்பரங்கள், வங்கிக் கணக்குகள் பற்றி காவல்துறையிடம் புகார் அளிக்க பொதுமக்களை அமைச்சர் ஊக்கமூட்டினார்.

சிக்கலில் சிக்கிய சூதாட்டக்காரர்களின் குடும்பங்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கக் கோருவதை அனுமதிக்கும் எந்தத் திட்டமும் உள்துறை அமைச்சிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த யோசனையை திரு யிப் முன் வைத்திருந்தார்.

“நமது தற்போதைய நடவடிக்கைகள் போதுமானவை அல்ல,” என்றார் அவர்.

“சூதாட்டப் பிரச்சினையில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவ அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன. சூதாட்டப் பித்தர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்க சமூக சேவை அமைப்புகளுக்கு நிதியுதவி, ஆதரவுக் குழுக்களை நடத்துவது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்