தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் குற்றங்களுக்காக 460க்கும் அதிகமான இளையர்கள் கைது

2 mins read
03ed9332-1d23-4a64-b33b-564c44c2f19b
காவல்துறை கடந்த ஆண்டு 19 வயதுக்கும் குறைவாக உள்ள 460க்கும் அதிகமான இளையர்களைப் பாலியல் குற்றங்களுக்காகக் கைதுசெய்தது. - படம்: சாவ்பாவ்

பாலியல் தொடர்பான குற்றங்களுக்காகக் கடந்த ஆண்டு 460க்கும் அதிகமான இளையர்களைக் கைதுசெய்துள்ளதாக சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் 19 அல்லது அதற்கும் குறைவான வயதில் உள்ளவர்கள்.

பாலியல் தொடர்பான காணொளிகளைக் காண்பதாலும் அது தொடர்பான உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அறியாததாலும் இளையர்கள் பலர் பாலியல் ரீதியான குற்றங்களைப் புரிய உந்தப்படுகின்றனர் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

2023ஆம் ஆண்டு 470க்கும் அதிகமான இளையர்கள் பாலியல் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர். 2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது 30% அதிகம்.

பாலியல் குற்றங்களுக்காகக் கடந்த ஆண்டு கைதான இளையர்களில் 16 வயதுக்குக் கீழ் உள்ளோருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டோரின் எண்ணிக்கை அதிகம்.

பெரும்பாலான சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் குற்றவாளிகளை அறிந்திருந்தனர்.

2023, 2024ஆம் ஆண்டுகளில் இளையர்களிடையே பாலியல் குற்றங்கள் கூடுவதை முன்னிட்டு உள்துறை அமைச்சும் கல்வியமைச்சும் விரிவான வழிகாட்டிகளை 2024 நவம்பரில் வெளியிட்டன.

ஏழு வயதிலிருந்து 19 வயதுக்கு உட்பட்ட இளையர்கள் வெளிப்படுத்தும் தகாத பாலியல் நடத்தையை அடையாளம் காண பள்ளிகளுக்கும் சமூக ஆலோசகர்களுக்கும் வழிகாட்டிகள் உதவின.

‘டிட்டேக்ட் ஏர்லி’ (DetACT Early) என்ற வழிகாட்டி பாலியல் ரீதியான தகாத நடத்தையைக் காண்பிக்கும் பிள்ளைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் வழிகாட்ட நிபுணர்களுக்கு உதவும் என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

இணைய பாலியல் துன்புறுத்தல்களை அடையாளம் காண உதவும் (Discern Online Sexual Harms) இரண்டாம் வழிகாட்டி, பாலியல் ரீதியான காணொளிகளைக் காணும் இளையர்களைக் கையாள நிபுணர்களுக்கு உதவுகிறது.

“இந்த வழிகாட்டி, பாலியல் தொடர்பான பொருள்களைச் சுற்றியுள்ள அண்மைய உளவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. 10 முதல் 19 வயதுடைய இளையர்களை இந்தத் தலைப்பில் பாதுகாப்பான மற்றும் இருவழி தொடர்புடைய உரையாடல்களில் ஈடுபடுத்த வயதுக்கு ஏற்ற செயல்பாடுகள், பணித்தாள்களைக் கொண்டுள்ளது,” என்று உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குடும்பச் செயல்பாடுகளில் ஏற்படும் சீரற்ற தன்மை மற்றும் துன்புறுத்தலின் வரலாறு ஆகியவை இளயர்களின் பாலியல் குற்றங்களுக்குப் பங்களிக்கக்கூடிய காரணங்களாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது. இவை நெருக்கமான உறவுகள் குறித்த அவர்களின் கருத்துகளைச் சிதைக்கக்கூடும் என்று அமைச்சு விளக்கியது.

குறிப்புச் சொற்கள்