உள்துறை அமைச்சு, ஏழு உள்துறைக் குழுக்களின் இணையத்தளங்களைப்போல் தென்பட்ட 500க்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள் அகற்றப்பட்டுள்ளன.
சிங்கப்பூர்க் காவல்துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு போன்றவை சம்பந்தப்பட்ட உள்துறைக் குழு அமைப்புகளில் அடங்கும்.
அந்தப் போலி இணையத்தளங்கள் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) கண்டுபிடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சும் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் (எச்டிஎக்ஸ்) புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தெரிவித்தன. எச்டிஎக்சும் சம்பந்தப்பட்ட ஏழு அமைப்புகளில் ஒன்றாகும்.
ஆகஸ்ட் 11க்குள் போலி இணையத்தளங்கள் அகற்றம்
போலி இணையத்தளங்கள் என்று அடையாளம் காணப்பட்டவை அனைத்தும் செவ்வாய்க்கிழமைக்குள் (ஆகஸ்ட் 11) அகற்றப்பட்டதாக உள்துறை அமைச்சு ஃபேஸ்புக்கில் கூறியது.
சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் சிறைத் துறை, உள்துறைக் குழுப் பயிலகம், எச்டிஎக்ஸ் ஆகியவை சம்பந்தப்பட்ட ஏழு உள்துறைக் குழுக்களாகும்.
கண்டுபிடிக்கப்பட்ட போலி இணையத்தளங்களுக்குச் சென்றவர்கள் அவை, உள்துறை அமைச்சு, உள்துறைக் குழுக்களின் அதிகாரபூர்வ இணையத்தளங்கள் என்று நம்பியிருக்கக்கூடும் என்று அமைச்சு சொன்னது.
அந்தப் போலி இணையத்தளங்கள் மோசடிச் செயல்களுக்காகவோ பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பறிப்பதற்காகவோ பயன்படுத்தப்பட்டதாக ஆதாரம் ஏதுமில்லை என்று இதுவரை நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.
உள்துறை அமைச்சு அல்லது உள்துறைக் குழுக்களின் இணைய முறைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கோ, ஊடுருவப்பட்டதற்கோ ஆதாரம் இல்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.
போலி இணையத்தளங்கள் குறித்த விழிப்புணர்வு
உள்துறை அல்லது உள்துறைக் குழுக்களின் இணையத்தளங்களைப் போன்று தென்படுபவற்றுக்குச் செல்லும்போது விழிப்புடன் இருக்குமாறு அமைச்சு அறிவுறுத்தியது.
சம்பந்தப்பட்ட இணையத்தளங்கள் உண்மையானவையா என்பதைச் சரிபார்த்துக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிகாரபூர்வ அரசாங்க இணையத்தளங்கள் ‘.gov.sg’ என்று முடியும் எனக் கூறிய அமைச்சு, சம்பந்தப்பட்ட இணைய முகவரிகளைச் சரிபார்த்த பின்னர் தனிப்பட்ட அல்லது முக்கியமான தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டது.


