தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

570,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு $400 - $1,000 வழங்குதொகை

2 mins read
‘சம்பாதித்துச் சேமியுங்கள் போனஸ்’ திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது
4efe8091-1d9b-4cc9-991f-8e5bf9bfda9c
முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தின்கீழ் 2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட $9 பில்லியன் மாஜுலா தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வழங்குதொகை தரப்படுவதாக மனிதவள அமைச்சு வியாழக்கிழமை (மார்ச் 20) தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மார்ச் மாத்தில் 570,000க்கும் அதிகமான சிங்கப்பூரர்களுக்கு ‘சம்பாதித்துச் சேமியுங்கள்’ போனசின் (Earn and Save bonus) ஒரு பகுதியாக $400லிருந்து $1,000 வரை வழங்கப்படவுள்ளது.

முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தின்கீழ் 2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட $9 பில்லியன் மாஜுலா தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வழங்குதொகை தரப்படுவதாக மனிதவள அமைச்சு வியாழக்கிழமை (மார்ச் 20) தெரிவித்தது.

இந்த போனஸ் பணிபுரியும் மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய சேமிப்பில் கூடுதல் ஊக்கத்தை அளிக்கும் என்று மார்ச் 20ஆம் தேதி மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

1973ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிங்கப்பூரர்கள் கீழ்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த வழங்குதொகை கிடைக்கும்.

போனஸ் தொகைக்குத் தகுதி பெற அவர்கள் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும்.

அத்துடன் கடந்த ஆண்டு அவர்களது மாதச் சம்பளம் $500லிருந்து $6,000 வரை இருந்திருக்க வேண்டும்.

அவர்கள் வசிக்கும் வீட்டின் ஆண்டு மதிப்பு $31,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரே ஒரு வீடு மட்டும் இருக்க வேண்டும்.

குறைந்த மாத வருமானம் உள்ளவர்களுக்கு அதிக போனஸ் தொகை வழங்கப்படும்.

மாத சராசரி வருமானம் $500 முதல் $2,500 வரை சம்பாதிப்பவர்களுக்கு $1,000 வழங்கப்படும். அதே நேரத்தில் $2,500 முதல் $3,500 வரை சம்பாதிப்பவர்களுக்கு $700 வழங்கப்படும்.

$3,500 முதல் $6,000 வரை சம்பாதிக்கும் மூத்த குடிமக்களுக்கு $400 கிடைக்கும்.

மூன்று பகுதிகளைக் கொண்ட மஜுலா தொகுப்பு, 50கள் மற்றும் 60 வயதுகளின் முற்பகுதியில் உள்ள சிங்கப்பூரர்களை இலக்காகக் கொண்டது. இவர்கள், ‘இளம் முதியவர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறது.

இந்தக் குழுவில், 1950 முதல் 1959ஆம் ஆண்டு வரை பிறந்த மெர்டேக்கா தலைமுறையினரை விட இளையவர்களும், 1949 அல்லது அதற்கு முன்னர் பிறந்த முன்னோடித் தலைமுறையினரும் அடங்குவர்.

போனஸ் தொகையைப் பெறத் தகுதியானவர்களின் மத்திய சேமநிதிக் கணக்குகளில் பணம் நிரப்பப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

போனஸ் தொகை பெறத் தகுதியானவர்களா என்பதை உறுதி செய்ய சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி govbenefits.gov.sg எனும் இணையப் பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்
போனஸ்மத்திய சேம நிதிமனிதவள அமைச்சு