லிட்டில் இந்தியா வட்டாரத்தில் புகையற்ற புகையிலைப் பொருள்களை விற்றதற்காகவும் வைத்திருந்ததற்காகவும் மொத்தம் 27 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் 24 வயது முதல் 77 வயது வரையில் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.
காவல்துறையுடன் இணைந்து செயல்பட்ட சுகாதார அறிவியல் ஆணையம், மே 15 முதல் ஜூன் 30 வரை மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் 600 கிலோவுக்கும் அதிகமான புகையற்ற புகையிலையைக் கைப்பற்றியது. இதன் சந்தை விலை $100,000க்கும் மேல் என்று மதிப்பிடப்படுகிறது.
புகையற்ற புகையிலை என்பது எரிக்காமல் பயன்படுத்தக்கூடியது.
புகையற்ற புகையிலை, சந்தர் ரோட்டிலும் வீராசாமி ரோட்டிலும் உள்ள வடிகால் மூடிகளுக்குக் கீழ் பதுக்கிவைக்கப்பட்டும் குப்பைத் தொட்டிகள் மற்றும் மின்சாரப் பெட்டிகளில் திணிக்கப்பட்டும் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
புகையற்ற புகையிலை சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு பொருள். அதில் உள்ள வேதிப்பொருள்களால் புற்றுநோய் ஏற்படலாம் என்று அறியப்படுகிறது.
புகையற்ற புகையிலையை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், விளம்பரம் செய்தல் ஆகியவை தொடர்பில் முதல் முறை குற்றம் புரிவோருக்கு $10,000 வரையிலான அபராதம், ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பலமுறை குற்றம் புரிவோருக்கு $20,000 வரையிலான அபராதம் அல்லது ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையே, தனிப்பட்ட சொத்துகள் தொடர்பான குற்றங்களுக்காக அந்த 27 பேரில் சிலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விவரம் வெளியிடவில்லை.
இந்நிலையில், இத்தகைய சட்டவிரோதப் பொருள்களை விற்பதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதார அறிவியல் ஆணையம் பங்காளி அமலாக்க அமைப்புகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும்.
இதற்குமுன், துவாஸ் சோதனைச்சாவடியில் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 800 கிலோவுக்கும் அதிகமான மெல்லக்கூடிய புகையிலையைச் சுங்கச்சாவடி அதிகாரிகள் ஆறு நாள்களில் கைப்பற்றினர்.

