அறநிறுவனங்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் வழங்கப்படும் நன்கொடையை வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையில் ஈடுசெய்ய அரசாங்கமும் சிங்கப்பூர் பந்தயப்பிடிப்புக் கழகமும் $600 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளன.
நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள $250 மில்லியன் பெறுமானமுள்ள எஸ்ஜி ஜிவ்ஸ் மானியமும் அடங்கும்.
சமூக உண்டியல், அதிபர் சவால், கலெக்டிவ் ஃபார் எ ஸ்ட்ராங்கர் சொசைட்டி (Collective for a Stronger Society) ஆகியவை மூலம் பல்வேறு திட்டங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைக்கு இந்த மானியத்தின் வழி வெள்ளிக்கு வெள்ளி ஈடுசெய்யப்படும்.
கிட்ஸ்டார்ட், காம்லிங்க் பிளஸ், முன்னாள் குற்றவாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவி வழங்கும் நியூ லைஃப் ஸ்டோரிசின் குடும்பங்களுக்கு வலுவூட்டும் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
அறநிறுவனங்கள், சமூக அமைப்புகள் ஆகியவற்றுக்கு நிதி திரட்டும் முயற்சிகளுக்கு அரசாங்கம் கூடுதல் உதவி வழங்குவதாகவும் இதன் ஒரு பகுதியாகப் புதிய மானியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வரவுசெலவுத் திட்ட தாக்கலின்போது பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
இத்திட்டத்துக்கு 2025ஆம் ஆண்டில் வழங்கப்படும் நன்கொடை, மானியம் மூலம் வெள்ளிக்கு வெள்ளி ஈடுசெய்யப்படும்.
மூன்று ஆண்டுகால கடப்பாடாக, ஒவ்வோர் ஆண்டும் $250,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையை நன்கொடை அளித்தால் ஒவ்வொரு வெள்ளிக்கும் $1.50 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பெரிய தொகையை நன்கொடை அளிப்பவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்வதை ஊக்குவிக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கலாசார இணை நிதியில் $100 மில்லியன் நிரப்பப்படும்.
இது 2029 நிதியாண்டின் இறுதிவரை நீட்டிக்கப்படும்.
சிங்கப்பூர் பந்தயப்பிடிப்புக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட நிதி திரட்டுத் திட்டத்தில் $270 மில்லியன் நிரப்பப்படும்.
இத்திட்டம் 2027 நிதி ஆண்டின் இறுதி வரை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகை அறிமுகம்
உள்ளூர் கலைகள், மரபுடைமை நடவடிக்கைகளில் பங்கேற்க சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கும் வகையில் எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் 18 வயதும் அதற்கும் அதிகமான அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் $100க்கும் அதிகமான வழங்கீட்டுத் தொகை வழங்கப்படும்.
அவற்றைப் பயன்படுத்தி கலைகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள், அரும்பொருளகக் கண்காட்சிகள், மரபுடைமை தொடர்பான நிகழ்ச்சிகளுக்குச் செல்லலாம்.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து வழங்கீட்டுத் தொகை வழங்கப்படும்.
அவற்றை 2028ஆம் ஆண்டிறுதி வரை பயன்படுத்தலாம்.
உணவு அங்காடி நிலையக் கடைக்காரர்களுக்கு உதவி
உணவு அங்காடி நிலையக் கடைக்காரர்களுக்கும் சந்தையில் கடை வைத்திருப்பவர்களுக்கும் ஆதரவு வழங்கப்பட உள்ளது.
அரசாங்கம், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டோரால் நிர்வகிக்கப்படும் நிலையங்களில் ஒவ்வொரு கடைக்கும் $600 வழங்கப்படும்.
வாடகை செலுத்த இத்தொகை கடைக்காரர்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாது, பழைய உணவு அங்காடி நிலையங்களைப் புதுப்பிக்கவும் புதிய நிலையங்களைக் கட்டவும் அடுத்த 20லிருந்து 30 ஆண்டுகளுக்கு $1 பில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்படுகிறது.
ஆக்டிவ்எஸ்ஜி வழங்கீட்டுத் தொகையாக $100
ஆக்டிவ்எஸ்ஜி உறுப்பினர்கள் அனைவருக்கும் எஸ்ஜி60 ஆக்டிவ்எஸ்ஜி வழங்கீட்டுத் தொகையாக $100 வழங்கப்படும்.
ஆக்டிவ்எஸ்ஜி கணக்கு இல்லாதோர் அதன் இணையத்தளம் வாயிலாக அதில் இலவசமாகச் சேர்ந்துகொள்ளலாம்.
ஆக்டிவ்எஸ்ஜி வழங்கீட்டுத் தொகையைப் பயன்படுத்தி விளையாட்டுத்துறை தொடர்பான நிலையங்களுக்கும் திட்டங்களுக்கும் பதிவு செய்துகொள்ளலாம்.
அடுத்த சில ஆண்டுகளில் தோ பாயோ, பொங்கோல், கிளமெண்டி ஆகிய வட்டாரங்களில் புதிய விளையாட்டு நிலையங்கள் கட்டப்படும்.
பாசிர் ரிஸ், குவீன்ஸ்டவுன், ஹவ்காங் ஆகிய வட்டாரங்களில் ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதல் நிதி
சுய உதவிக் குழுக்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்படும் என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவற்றுக்கு கூடுதல் நிதியாக $60 மில்லியன் வழங்கப்படும்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், மெண்டாக்கி, சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், யூரேஷியர் சங்கம் ஆகிய சுய உதவிக் குழுக்களுக்கு இந்த உதவி வழங்கப்படும்.