சிங்கப்பூர் ஊழியர்களில் பத்தில் எழுவர் வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்புவதாக அனைத்துலகப் பண நிதியத்தைச் சேர்ந்த பொருளியல் நிபுணர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.
உலகின் மற்ற நாட்டினரை ஒப்பிடும்போது இந்த விகிதம் அதிகம்.
சிங்கப்பூரின் நாணய ஆணையத்தின் ஆண்டுக்கு இருமுறை வரும் அறிக்கை ஒன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், பொருளியல் நிபுணர்களான ஷுஜாத் கான், மார்க்கஸ் மெக்டொனால்ட் இருவரின் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
அதில், வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டுக்கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொழில்முறை சேவை வழங்கும் நிறுவனமான ‘பிடபிள்யூசி’ கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றை அவர்கள் அக்கட்டுரையில் மேற்கோள்காட்டினர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அடுத்த 12 மாதங்களுக்கு சிங்கப்பூரர்களில் 73 விழுக்காட்டினருக்கு நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டுக்கு வலுவான விருப்பம் இருப்பதாக அந்த அறிக்கை கூறியதை அவர்கள் சுட்டினர்.
உலகளாவிய சராசரியான 63 விழுக்காட்டை விட இது கணிசமான அளவு அதிகம்.
சிங்கப்பூரில் ஊழியர்களும் முதலாளிகளும் நீக்குபோக்கான வேலை முறையை விரும்புவதாகவும் இது, மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் அதிகம் என்றும் பிடபிள்யூசியின் அறிக்கை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் வீட்டிலிருந்து வேலை செய்யும் விகிதம் கிட்டத்தட்ட 20 விழுக்காடாக நிலைப்பட்டுள்ளதாக மேற்கண்ட பொருளியல் நிபுணர்களின் கட்டுரை குறிப்பிட்டது. கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்திய நிலவரத்தில் இருந்ததைவிட இது சற்று அதிகம்.
அந்த இரு பொருளியல் நிபுணர்களின் பகுப்பாய்வின்படி, சிங்கப்பூரில் நீக்குபோக்கான வேலைகளை மக்கள் அதிகமாக விரும்ப அவர்களின் வயது, உற்பத்தித்திறன், வேலை செய்யும் குறிப்பிட்ட துறைகள் போன்றவை முக்கியக் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
பெரும்பாலான இளையர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யவே விரும்புவதாக கூறப்பட்டது.
2020ல் பெருந்தொற்று காலத்தின்போது தகவல் தொடர்பு, நிதிச் சேவைகள் போன்ற மின்னிலக் துறைகளில் பணிபுரிந்தோரில் 77 விழுக்காட்டினர் வீட்டிலிருந்து பணிபுரிந்தனர்.
இதற்கு மாறாக, அதே காலகட்டத்தில் உணவு, பானச் சேவைகளில் பணிபுரிந்தோரில் 11 விழுக்காட்டினரும் சுகாதாரம், சமூகச் சேவை ஊழியர்களில் 28 விழுக்காட்டினரும் மட்டுமே வீட்டிலிருந்து பணிபுரிந்தனர்.
மனிதவள அமைச்சின் தரவுகளும் அந்தப் பொருளியல் நிபுணர்களின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, சிங்கப்பூரில் உள்ள 90 விழுக்காட்டுக்கும் அதிகமான நிறுவனங்கள் 2021ல் குறைந்தபட்சம் ஒரு திட்டமிடப்பட்ட நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டை வழங்கின.
பெருந்தொற்றுக்கு முந்திய ஆறு ஆண்டுகளில் இந்த விகிதம் சராசரியாக 50 விழுக்காடாக இருந்தது.


