தெம்பனிஸ் சங்காட் வட்டாரத்தில் வீடுகளை நோக்கிப் படையெடுக்கும் சில்வண்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாக, அண்மையில் அமைக்கப்பட்ட பணிக்குழு ஏப்ரல் 23 நிலவரப்படி, 7,000க்கும் மேற்பட்ட சில்வண்டுகளைப் பிடித்துள்ளது.
தெம்பனிஸ் சங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் சூ தலைமையிலான பணிக்குழு, ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட ஒவ்வோர் இரவும் ஒளிப்பொறிகளை வைத்து இந்தப் பூச்சிகளைப் பிடித்து வருகிறது.
தெம்பனிஸ் நகர மன்றம், பூச்சியியல் வல்லுநர்கள், தெம்பனிஸ் சங்காட் நேச்சர் காக்கிஸ் சேப்டர்’ அமைப்பின் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தெம்பனிஸ் சங்காட்டில் நிலவும் சில்வண்டுத் தொல்லையை ஆராய்ந்து அதற்குத் தீர்வுகாண்பதே குழுவின் நோக்கம்.
மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட பணிக்குழு, ஆரஞ்சு நிற இறக்கையுடைய சில்வண்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளை ஐந்து மாதச் சோதனையோட்டமாக மேற்கொண்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் நடைபாதைகளில் உள்ள விளக்குகளின் நிறத்தையும் ஒளிச்செறிவையும் மாற்றி அமைப்பதன்மூலம், அங்குச் சில்வண்டுகளின் படையெடுப்பைக் குறைக்க முடியுமா என்பதையும் பணிக்குழு ஆராய்ந்து வருகிறது.
இதற்கிடையே, பொறிகளைக் கொண்டு சில்வண்டுகளைப் பிடித்து அகற்றுவதன் மூலம், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகத் திரு சூ தெரிவித்தார்.

