அறிவுத்திறன் குறைபாடுள்ள ஆடவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்தோனீசிய பணிப்பெண்ணுக்கு எட்டு ஆண்டு, 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய 57 வயது ஆடவரை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு குற்றத்தை அந்த 29 வயது பணிப்பெண் ஒப்புக்கொண்டார்.
இதர நான்கு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றமிழைத்தவரைப் பற்றிய விவரங்களை வெளியிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி-ஷானாஸ் தண்டனையை அறிவித்தபோது, எந்தவொரு சூழ்நிலை ஆனாலும் பாலியல் வன்கொடுமை என்பது கொடூரமான செயல் என்றார்.
மேலும், “தம்மைத் தற்காத்துக்கொள்ள தெரியாத, மனதளவில் குறைபாடு உள்ள ஒருவருக்கு எதிரான அத்தகையச் செயல் மிகவும் மோசமானது,” என்றார் அவர்.
இந்தக் கொடுமையான குற்றத்திற்கு பிரம்படி கொடுக்கப்பட வேண்டும். ஆயினும் பெண்ணுக்குப் பிரம்படி கொடுக்க சட்டம் அனுமதிக்காததால் அவ்வாறு செய்ய இயலவில்லை என்றும் நீதிபதி தமது தீர்ப்பின்போது கூறினார்.
சம்பவம் நடைபெற்ற வீட்டில் 2021 மார்ச் முதல் இந்தோனீசியப் பெண் வேலை செய்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி அந்த வீட்டின் முதலாளிக்கு மூன்று காணொளிகளை ஒருவர் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைத்தார். பணிப்பெண் அந்த வீட்டிலுள்ள அறிவுத்திறன் குறைபாடுள்ள ஆடவரிடம் பாலியல் செய்கைகளில் ஈடுபட்டதை அந்தக் காணொளிகள் காட்டின.
அதனைத் தொடர்ந்து மறுநாள் ஜனவரி 9ஆம் தேதி காவல்துறையிடம் அது பற்றி புகார் செய்யப்பட்டது.