பொதுத் தேர்தல் பணியில் 8,000க்கும் மேலான காவல்துறை தேசிய சேவையாளர்கள்

2 mins read
03ee78b8-400b-498a-8bd6-d72be95d3fea
பல்வேறு இடங்களில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களில் அதிகமானோர் வருவர் என்று எதிர்பார்க்கப்படுவதால் கூடுதலான காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தல் 2025ஐ முன்னிட்டு பிரசாரக் கூட்டங்கள், வாக்களிப்பு நிலையங்கள், வாக்குகளை எண்ணும் நிலையங்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதால் 8,000க்கும் அதிகமான தயார்நிலை காவல்துறை தேசியச் சேவையாளர்களைப் பணிக்குத் திரும்பும்படி காவல்துறை கூறியுள்ளது.

கூட்டங்கள் பாதுகாப்பாகவும் எவ்வித தொந்தரவும் இன்றி நடைபெறுவதை உறுதிசெய்ய கேமராக்கள் போன்ற அதிநவீன கருவிகளும் பயன்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

- படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மே 3ஆம் தேதி 17 குழுத்தொகுதிகளிலும் 15 தனித்தொகுதிகளிலும் 2.6 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நாளுக்கு முன் ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து மே 1ஆம் தேதி வரை 51 இடங்கள் அரசியல் பேரணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 24ஆம் தேதி பிடோக் காவல்துறை நிலையம் கண்காணிக்கும் பிரசார இடம் செய்தியாளர்களுக்குச் சுற்றி காண்பிக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாவதைத் தவிர்க்கவும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன.

- படம்: சாவ்பாவ்

பிரசாரக் கூட்டங்களின் நிலவரத்துக்கு ஏற்ப கூட்டக் கட்டுப்பாட்டு திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் காவல்துறை சொன்னது.

பொதுத் தேர்தலுக்கான பணிகளைச் செய்ய இதர அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் அது குறிப்பிட்டது.

தேர்தல் ஆணை பிறக்கப்பட்டதிலிருந்து திட்டங்களை அமல்படுத்த காவல்துறை அதிகாரிகள் இரவும் பகலும் அயராது பணிபுரிவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

ஒரே இரவில் பல இடங்களில் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறுவது போன்ற பல்வேறு சூழல்களைக் கையாள்வதற்குத் தயாராகக் காவல்துறை திட்டங்களை வகுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு தேர்தலின்போது பிரசாரத்தின் இறுதி நாளில் 14 இடங்களில் நடைபெற்ற கூட்டங்களைக் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.

குறிப்புச் சொற்கள்