ஆக அண்மையில் வழங்கப்பட்ட $300 சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளை, 800,000க்கும் அதிகமான சிங்கப்பூர் குடும்பங்கள் பெற்றுவிட்டன.
குடியரசின் 1.33 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்களில் அது 60 விழுக்காட்டுக்கும் அதிகம் என்று கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
ஆறாம் கட்ட ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளின் வழங்கீடு ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. அது டிசம்பர் 31ஆம் தேதிவரை செல்லுபடியாக இருக்கும்.
சிங்கப்பூரர்களுக்கு அன்றாடச் செலவுகளைக் குறைக்க உதவும் நோக்கில் வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளில் பாதி, பேரங்காடிகளிலும் எஞ்சியவை பங்கெடுக்கும் உணவங்காடிக் கடைகளிலும் வீடமைப்புப் பேட்டைக் கடைகளிலும் பயன்படுத்தப்படலாம்.
குடியிருப்பாளர்கள் மின்னிலக்க முறையில் அந்தப் பற்றுச்சீட்டுகளை எளிதில் பெறுவதைக் காண நெகிழ்ச்சியாக இருந்ததாக திருவாட்டி லோ கூறினார். சிலர் அண்டைவீட்டார், நண்பர்கள், தொண்டூழியர்கள், தூதர்கள் ஆகியோரிடம் உதவி நாடினர்.
இது, அறிவார்ந்த தேசத்தை நோக்கி நாம் ஒன்றிணைந்து செயல்படும் நிலையில், உண்மையிலேயே நமது சமூகத்தின் கூட்டு உணர்வைப் பிரதிபலிப்பதாக திருவாட்டி லோ சொன்னார்.
இன்னும் பற்றுச்சீட்டுகளைப் பெறாதவர்கள், ‘RedeemSG’ இணையத்தளத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.