நொடித்துப் போனவராக அறிவிக்கக்கோரி அதிகமானோர் விண்ணப்பம்

1 mins read
53cd4ade-3de4-403a-8800-00e0bf81c076
நொடித்துப்போகும் நிலையைத் தவிர்க்க சட்ட அமைச்சு திட்டம் ஒன்றின் மூலம் உதவிக்கரம் நீட்டுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நடப்பாண்டின் முதல் பாதியில், நொடித்துப் போனவர்களாக அறிவிக்கக் கோரி சிங்கப்பூரில் அதிகமானோர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

ஜூன் 30 அரையாண்டு இறுதி நிலவரப்படி 2,334 பேர் அவ்வாறு விண்ணப்பம் செய்ததாக சட்ட அமைச்சின் அண்மைய தகவல்கள் தெரிவித்தன.

2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் நொடித்துப் போனவர்களாக அறிவிக்கக் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைக் காட்டிலும் இது 25 விழுக்காடு அதிகம்.

விண்ணப்பத்தின் அடிப்படையில் 594 பேர் நொடித்துப் போனவர்களாக அறிவிக்கப்பட்டனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 விழுக்காடு அதிகம்.

வர்த்தகத் தோல்வி மற்றும் மிதமிஞ்சிய கடன்களால் நொடித்துப்போகும் நிலைக்கு ஒருவர் வருவது அவரைப் பொறுத்தவரை ஒரு துன்பமான அனுபவம்.

நொடித்துப்போனவர்களாக அறிவிக்கப்படுபவர் எதிர்கொள்ளும் பின்விளைவுகள் கடினமானவை. சில பொறுப்புகளை அவர்களால் ஏற்க இயலாது. வேலைகளைக்கூட சிலர் இழப்பதுண்டு.

குறைந்தபட்சம் $15,000 கடன் இருந்தாலே நொடித்துப்போனதாக அறிவிக்கக்கோரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அவருக்குக் கடன் அளித்தவர்கள் அவருக்காக விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்தவர் ‘கடனைத் திருப்பிச்செலுத்தும் திட்டத்தி’ற்குத் தகுதியானவரா என்பது ஆய்வு செய்யப்படும். கடனில் சிக்கியோர் நொடித்துப்போகும் நிலைக்குச் செல்லாமல் உதவும் பொருட்டு சட்ட அமைச்சால் நிர்வகிக்கப்படும் திட்டம் அது.

குறிப்புச் சொற்கள்