பெண் சுகாதாரத்தில் கூடுதல் கவனம்: சுகாதார அமைச்சர் ஓங் யி காங்

பெண் சுகாதாரத்தில் கூடுதல் கவனம்: சுகாதார அமைச்சர் ஓங் யி காங்

2 mins read
8dadc267-7096-46ff-8ed0-137d8a8eb2ad
மகளிர் தினத்தை முன்னிட்டு செம்பாவாங் ஈஸ்ட் பெண்கள் விழா கொண்டாட்டத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடந்துமுடிந்த வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் சுகாதார அமைச்சு கொள்கைகளில் பெரிய மாற்றங்களை அறிவிக்கவில்லை. இருப்பினும், நீண்டகாலத்துக்கான சில அம்சங்கள் முன்வைக்கப்பட்டன என்றார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.

மார்ச் 8ஆம் தேதி, மகளிர் தினத்தை முன்னிட்டு செம்பவாங் வெஸ்ட்டில் நடைபெற்ற மகளிர் விழாவில் கலந்துகொண்டு பேசிய திரு ஓங், முன்னெச்சரிக்கை மருத்துவத்தில் கவனம் செலுத்துவது முக்கிய மாற்றம் என்றார்.

“முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சைகளுக்கும் மெடி‌ஷீல்ட் லைஃப் திட்டத்தை விரிவுபடுத்தத் தயாராகிவிட்டோம். இதற்குமுன் அவ்வாறு செய்தது இல்லை,” என்றார் திரு ஓங்.

முன்னெச்சரிக்கை பராமரிப்பு பணத்தை மிச்சப்படுத்த உதவுவதுடன் சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தின்மீது எதிர்காலத்தில் கூடுதல் நிதிச் சுமையை அதிகரிக்காது என்று திரு ஓங் குறிப்பிட்டார்.

சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங், “சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்குச் சிறந்த வழி ஆரோக்கியமாக இருப்பது. அதுதான் நமது சுகாதாரப் பராமரிப்பு உருமாற்றத்தின் ஆணிவேர்,” என்றார்.

அதை முன்னிட்டு சுகாதார அமைச்சு மெடிசேவ் திட்டத்தின் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களையும் திரு ஓங் சுட்டினார்.

அவசர அறுவைச் சிகிச்சை, நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்வது போன்ற இக்கட்டான சூழலில் சிங்கப்பூரர்களுக்கு உதவுவதற்காக மெடிசேவ் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது.

ஆனால் இனி அந்த ஒரு கடமையை மட்டும் அது செய்யாது என்ற திரு ஓங், நல்ல முன்னெச்சரிக்கை பராமரிப்பிலும் நாள்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் மெடிசேவ் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

அத்துடன், ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தின்கீழ், கூடுதலான பெண்களை எவ்வாறு எலும்பு அடர்த்தி சோதனைகளில் பங்கேற்கவைப்பது என்பது குறித்து சுகாதார அமைச்சு ஆராயும் என்றார் திரு ஓங்.

பெண்களிடையே, குறிப்பாக மாதவிடாய் முடிவுற்ற நிலையில் உள்ள பெண்கள் மத்தியில் எலும்பு வலுவிழப்பதுடன் எளிதில் முறியக்கூடிய அபாயம் உள்ளதைத் திரு ஓங் சுட்டினார்.

சுகாதார அமைச்சரான பிறகே தனிப்பட்ட முறையில் பெண்களின் சுகாதாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்துகொண்டதாக அவர் கூறினார்.

பெண்கள் சராசரியாகக் கூடுதல் காலம் உயிர்வாழ்வதால் மார்பகப் புற்றுநோய், மாதவிடாய் நின்றுபோதல் போன்ற பல்வேறு உடல் ரீதியான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்ட திரு ஓங், குடும்பங்களின் பராமரிப்பாளர்களாக உள்ள அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடுவதாகச் சொன்னார்.

எனவே, பெண்கள் சுகாதாரத்தில் சுகாதார அமைச்சு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகத் திரு ஓங் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்