தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் வர்த்தகங்களுக்கு வெகுமதி

2 mins read
9d8133c0-1f3b-4b20-a478-b7f0b592036d
தேவைக்கு ஏற்ப மின்சாரப் பயன்பாட்டை மாற்றியமைக்கும்போது உச்சவேளை நேரங்களின்போது மின்சாரக் கட்டமைப்புக்கு நெருக்கடி ஏற்படாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உச்சவேளை நேரங்களில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துகொள்ளும் வர்த்தகங்களுக்கு எரிசக்தி சந்தை ஆணையத்தின் விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தின்கீழ் வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, குறிப்பிட்ட கொள் அளவைக் கொண்ட மின்கலன் எரிசக்தி கட்டமைப்பைக் கொண்டுள்ள வர்த்தகங்கள் உச்சவேளை நேரங்களில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம்.

மின்சாரத்துக்குப் பதிலாக அவை மின்கலன்களைப் பயன்படுத்தலாம்.

குறைவான மின்சாரக் கட்டணம், நிதிச் சலுகைகள் ஆகியவை இத்திட்டம் மூலம் வர்த்தகங்களுக்குக் கிடைக்கும் நேரடி அனுகூலமாகும்.

அதுமட்டுமல்லாது, தேவைக்கு ஏற்ப மின்சாரப் பயன்பாட்டை மாற்றியமைக்கும்போது உச்சவேளை நேரங்களின்போது மின்சாரக் கட்டமைப்புக்கு நெருக்கடி ஏற்படாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் திடீர், எதிர்பாரா மின்தடைகளைத் தடுக்கலாம்.

மேலும் மேகமூட்டமாக இருக்கும்போது சூரியசக்தி அவ்வப்போது கிடைக்கும்.

மின்சார இருப்பு, சந்தை நிலவரம், விநியோகக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து மின்சார இறக்குமதி அமையக்கூடும்.

எனவே தேவைக்கு ஏற்ப நீக்குப்போக்குடன் நடந்துகொள்வது (மின்சாரப் பயன்பாடு) தொடர்பான ஈராண்டுத் திட்டத்தை 2022ஆம் ஆண்டில் எரிசக்தி சந்தை ஆணையம் அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் விரிவாக்கம் குறித்து அக்டோபர் 21ஆம் தேதியன்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் அறிவித்தார்.

மின்கல எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்பு கொண்ட நிறுவனங்கள், கம்ஃபர்ட்டெல்குரோ ஆகியவற்றுடனான வர்த்தகங்கள் இத்திட்டத்தில் இணையும் என்று அவர் தெரிவித்தார்.

மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டும் சாதனங்களை கம்ஃபர்ட்டெல்குரோ வைத்திருக்கிறது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார தொடர்பான நிகழ்வில் துணைப் பிரதமர் கான் பேசினார்.

இந்த நிகழ்வு சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.

2023ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் வர்த்தகங்கள் அவற்றின் மின்சாரக் கட்டணத்தில் $700 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மிச்சப்படுத்தியதாக எரிசக்தி சந்தை ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்