நேரில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் கிட்டத்தட்ட சமமாக இருந்தாலும், கடைத் திருட்டு, பார்வையால் பாலியல் இன்புறுதல் (voyeurism) போன்ற குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிப்பதாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
காவல்துறை திங்கட்கிழமை (பிப்ரவரி 17) வெளியிட்ட வருடாந்தர குற்ற அறிக்கை இதைத் தெரிவித்தது.
நேரில் நடக்கும் குற்றங்களின் (இணையக் குற்றங்களை உள்ளடக்காதவை) எண்ணிக்கை 2023ல் 19,966ஆக இருந்தது. 2024ல் அந்த எண்ணிக்கை 19,969ஆக சிறிது கூடியது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ல் கொலை, கத்தி தொடர்பான சம்பவங்கள், கடைத் திருட்டு, பார்வையால் பாலியல் இன்புறுதல் ஆகிய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
அதே சமயம், இல்லம்/கட்டடத்தில் திருட்டு, பாலியல் வன்கொடுமை, மானபங்கச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது.
2024ல் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மூன்று முக்கியக் குற்றங்களாக கடைத் திருட்டு, மானபங்கம், பார்வையால் பாலியல் இன்புறுதல் ஆகியவற்றைக் காவல்துறை அடையாளம் கண்டது.
கடைத் திருட்டு அதிகரிப்பு
2024ல் நேரில் நடந்த குற்றங்களில் கடைத் திருட்டே ஆகப்பெரிய பங்கு (21.2%) வகித்தது. கடைத் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை 2023ல் 3,939லிருந்து 2024ல் 4,237ஆக அதிகரித்தது.
இதற்குக் காரணம், கூடுதலான கடைகள் கண்காணிப்புப் புகைப்படக் கருவிகளைப் பயன்படுத்துவதாக இருக்கலாம் என காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சில கருவிகள் முகங்களை அடையாளங்காணும் தொழில்நுட்பத்தையும் உள்ளடக்குவதால் மீண்டும் கடைகளில் திருடுவோரைக் கண்டுபிடிக்க முடிகிறது.
கடைத் திருட்டுக்காக கைதான இளையர்களின் எண்ணிக்கை 2024ல் 19.7 விழுக்காடு குறைந்தபோதும், இளையர்களிடையே முன்னணி வகிக்கும் குற்றங்களில் ஒன்றாக இது தொடர்கிறது. அதனால், காவல்துறை கல்வி அமைச்சுடன் இணைந்து பள்ளிகளில் ஆண்டுக்கு ஒருமுறையாவது இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
செஃபோரா, பாப்புலர், முஸ்தஃபா சென்டர் ஆகியவற்றின் அனைத்துக் கடைகளையும் சில்லறை விற்பனையாளர்களுக்கான கடைத் திருட்டு விழிப்புணர்வுத் திட்டத்தில் காவல்துறை சேர்த்துள்ளது. 2024 டிசம்பர் 31 நிலவரப்படி 1,000க்கும் மேற்பட்ட கடைகள் இத்திட்டத்தில் இடம்பெற்றன.
காவல்துறை, கடைகளுடன் இணைந்து கடைத் திருட்டைத் தடுக்கும் உத்திகளை அறிமுகப்படுத்த இத்திட்டம் உதவும். இதில் இணைய விரும்பும் கடைகள், வட்டாரக் காவல் நிலையங்களை அணுகலாம்.
மானபங்கம், பாலியல் வன்கொடுமை சரிவு
மானபங்கச் சம்பவ எண்ணிக்கை 2023ல் 1,528லிருந்து 2024ல் 1,427க்குக் குறைந்தாலும், 2024ல் நேரில் நடந்த குற்றங்களில் அது 7.1 விழுக்காடு பங்கு வகித்தது. பொழுதுபோக்கு இடங்கள், பொதுப் போக்குவரத்தில் இச்சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது.
பாலியல் வன்கொடுமைக் குற்றங்களின் எண்ணிக்கை 2023ல் 436லிருந்து 2024ல் 401ஆகக் குறைந்தது.
பார்வையால் பாலியல் இன்புறுதல் அதிகரிப்பு
பார்வையால் பாலியல் இன்புறும் சம்பவங்களின் எண்ணிக்கை 2023ல் 476லிருந்து 2024ல் 519ஆக அதிகரித்தது.
சிங்கப்பூர் கழிவறைச் சங்கத்துடன் இணைந்து, பொதுக் கழிவறைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகக் காவல்துறை கூறியது. கழிவறை நுழைவாயிலில் கண்காணிப்புப் புகைப்படக் கருவி வைத்தல், மேம்படுத்தப்பட்ட விளக்கு அமைப்புகள் போன்றவை இவற்றில் உள்ளடங்கும்.
2025ன் ‘நம்மையே பார்ப்போம்’ விருதுகளில் புதிய ‘பாதுகாப்பான கழிவறை’ விருதையும் சிங்கப்பூர் கழிவறைச் சங்கத்துடன் இணைந்து காவல்துறை அறிமுகப்படுத்தவுள்ளது.
ஒளித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கருவிகள் இருக்கின்றனவா, மின்படிகளின் அருகே யாரேனும் சந்தேகத்திற்குரிய வகையில் நடக்கிறார்களா என விழிப்பாக இருக்கும்படி மக்களைக் காவல்துறை அறிவுறுத்துகிறது.
கொலை, கத்தி தொடர்பான சம்பவங்கள் அதிகரிப்பு
கொலைச் சம்பவ எண்ணிக்கை 2023ல் நான்கிலிருந்து 2024ல் பத்தாக அதிகரித்தது என காவல்துறை கூறியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே ஆக அதிகம்.
அந்த பத்து சம்பவங்களிலும் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டதாகவும் பெரும்பாலோர் இறந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்றும் காவல்துறை கூறியது.
கத்தி தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை 2023ல் 117லிருந்து 2024ல் 131ஆக அதிகரித்தது.
வீடு புகுந்து திருடுவது குறைந்தது
2024ன் நடுவில் தனியார் குடியிருப்புப் பேட்டைகளில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் திடீரென அதிகரித்தாலும், அவற்றின் மொத்த எண்ணிக்கை 2023ல் 135லிருந்து 2024ல் 118ஆகக் குறைந்தது.