உள்நாட்டில் அஸ்தியைத் தூவ அதிகமானோர் விருப்பம்

2 mins read
10a1ce2c-087a-4d77-b8c4-4133971dd5e2
சுவா சூ காங் இடுகாட்டில் மே 2021ல் அமைக்கப்பட்ட அமைதித் தோட்டம், 7,600 அமரர்களின் அஸ்தி தூவும் இடமாக விளங்குகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

உள்நாட்டில் முதன்முறையாக அமைக்கப்படும் அஸ்தி தூவும் தோட்டத்தைச் சிங்கப்பூர் திறந்து நான்கு ஆண்டுகள் ஆன பிறகும், கூடுதலானோர் தங்களது அன்புக்குரியோரின் இறுதி உறைவிடமாக அதைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு நிலத்தில் தங்கள் அஸ்தி தூவப்பட்ட உயிர்நீத்த தனிநபர்களின் எண்ணிக்கை, 2021ல் பதிவான 900லிருந்து 2024ல் 2,300க்கும் அதிகமாக உயர்ந்ததாகத் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

சுவா சூ காங் இடுகாட்டில் மே 2021ல் அமைக்கப்பட்ட அமைதித் தோட்டம், 7,600 அமரர்களின் அஸ்தி தூவும் இடமாக விளங்குவதாகத் தேசியச் சுற்றுப்புற வாரியம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விக்கு அளித்த பதிலின்போது கூறியது. 

அமைதிப் பூங்கா என்ற இரண்டாவது வசதி, புதிய மண்டாய் தகனச்சாலையில் இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் திறக்கப்படவுள்ளதாகவும் தேசியச் சுற்றுப்புற வாரியம் கூறியது.

நிலவளம் அதிகமில்லாத சிங்கப்பூரில் எரியூட்டப்பட்ட சடலங்களின் அஸ்தியை நிர்வகிப்பதற்கு இத்தகைய தோட்டங்கள் மற்றொரு தெரிவாக விளங்குகின்றன. 

அஸ்தியைப் பேழை ஒன்றுக்குள் வைத்துத் தகனச்சாலையில் நீத்தார் குடும்பத்தினர் விட்டுவைக்கலாம் அல்லது அஸ்தியைக் கடலில் கரைக்கலாம்.

உள்நாட்டில் அஸ்தியைத் தூவுவதற்கான கட்டணம், 320 வெள்ளி. கடலில் அஸ்தி கரைப்பதற்கு, என்ன சடங்குகள் செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து 200 வெள்ளி முதல் 1,000 வெள்ளி வரையிலான கட்டணம் செலுத்த வேண்டும்.

அமைதித் தோட்டத்தின் நல்ல வடிவமைப்பு,  உள்நாட்டில் அஸ்தி தூவும் முறையின் பிரபலத்தை அதிகரிக்கப் பங்களித்திருக்கக்கூடும் என்று ‘டைரெக்ட் ஃபியூனரல் சர்விசஸ்’ இறுதிச் சடங்கு நிறுவனத்தின் நிறுவனர் ரோலண்ட் டே, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

அஸ்தி தூவுவதற்கான தடங்கள் அமைக்கப்பட்டதுடன் நீத்தாரின் குடும்பத்தினருக்குத் தனிமையை வழங்க அந்தத் தடங்களுக்கு இடையே மரங்கள், புதர்கள் ஆகியவை நடப்பட்டுள்ளன. 

சக்கர நாற்காலிப் பயனாளர்களும் அஸ்தி தூவப்படுவதைக் காண்பதற்கு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்