மேலும் பல நிறுவனங்கள் சம்பள உயர்வை நிறுத்திவைக்க உத்தேசம்: ஆய்வு

1 mins read
4781a1ce-36c0-4c14-b899-7239d54c7637
சம்பள உயர்வை நிறுத்திவைக்கத் திட்டமிடும் வணிகங்களின் பங்கு 35 விழுக்காட்டிலிருந்து 41 விழுக்காடாக அதிகரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொருளியல் நிச்சயமற்ற சூழல் காரணமாக அடுத்த ஓராண்டில் மேலும் பல நிறுவனங்கள் சம்பள உயர்வை நிறுத்திவைக்க உள்ளதாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) வெளியிடப்பட்ட சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளியல் நிலை குறித்த வர்த்தக உணர்வு, முந்திய ஆண்டின் 35 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடாகக் குறைந்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள், அடுத்த 12 மாதங்களில் நிலைமை மோசமடையும் என்று இப்போது எதிர்பார்க்கின்றன.

அதிகரித்துவரும் இந்த நம்பிக்கையற்ற கண்ணோட்டம், மேலும் எச்சரிக்கையான சம்பளக் கொள்கைகளுக்கு வழிவகுக்கிறது. சம்பள உயர்வை நிறுத்திவைக்கத் திட்டமிடும் வணிகங்களின் பங்கு 35 விழுக்காட்டிலிருந்து 41 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேசமயம், ஊதியத்தை உயர்த்த உத்தேசித்துள்ள வணிகங்களின் பங்கு 2024 ஆய்வில் 64 விழுக்காட்டிலிருந்து 59 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இந்தச் சம்பள உயர்வு நிறுத்தம், முதன்மையாகச் சிறிய நிறுவனங்களால் செலுத்தப்படுகிறது. சிறு, நடுத்தர நிறுவனங்களில் 43 விழுக்காட்டு நிறுவனங்கள் ஊதியத்தை நிலையாக வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளன. இது, பெரிய நிறுவனங்களில் 28 விழுக்காடு மட்டுமே ஆகும்.

பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்களே கடந்த ஆண்டில் ஊதியத்தை அதிகரித்தன. அடுத்த 12 மாதங்களில் தொடர்ந்து அவ்வாறு செய்ய அவை திட்டமிட்டுள்ளன. இவற்றில் வங்கி, காப்புறுதி நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் ஊதிய உயர்வுக்கு முன்னிலை வகிக்கின்றன.

இதற்கு மாறாக, கட்டுமானம், குடிசார் பொறியியல், நிதி, காப்புறுதித் துறைகளில் உள்ள வணிகங்கள், ஊதிய உயர்வை நிறுத்திவைக்க உத்தேசித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்