சிங்கப்பூரில் இந்த ஆண்டின் (2025) மூன்றாம் காலாண்டில் ஆட்சேர்ப்புக்குத் திட்டமிடுவதாகக் கூடுதலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம் தங்கள் மொத்த ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க விரும்புவதாகவும் அவை கூறியுள்ளன.
வேலைவாய்ப்பு நிறுவனமான ‘மேன்பவர் குரூப்’ நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற நிறுவனங்கள் அவ்வாறு குறிப்பிட்டன.
மனிதவள அமைச்சு கடந்த மார்ச் மாதம் நடத்திய கருத்தாய்வில் குறைவான நிறுவனங்களே அடுத்த 3 மாதங்களில் ஆட்சேர்ப்பு அல்லது ஊதிய உயர்வுக்குத் திட்டமிடுவதாகக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
‘மேன்பவர் குரூப்’ நடத்திய காலாண்டுக் கருத்தாய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) வெளியிடப்பட்டன.
கருத்தாய்வில் 542 நிறுவனங்கள் கலந்துகொண்டன. அவற்றில் 43 விழுக்காட்டு நிறுவனங்கள் மூன்றாம் காலாண்டில் ஆட்சேர்ப்புக்குத் திட்டமிடுகின்றன. ஒப்புநோக்க, இரண்டாம் காலாண்டில் 39 விழுக்காட்டு நிறுவனங்களே அவ்வாறு திட்டமிட்டிருந்தன.
அண்மைய கருத்தாய்வில், 19 விழுக்காட்டு நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க விரும்புவதாகக் கூறின. ஒப்பிடுகையில், முந்தைய கருத்தாய்வில் 12 விழுக்காட்டு நிறுவனங்கள் அவ்வாறு கூறியிருந்தன.
எனவே, மூன்றாம் காலாண்டுக்கான சிங்கப்பூரின் நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் குறைந்து 24 விழுக்காடானது. இரண்டாம் காலாண்டில் அது 27 விழுக்காடாகப் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
ஆட்சேர்ப்புக்குத் திட்டமிடும் நிறுவனங்களின் விகிதத்திலிருந்து ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிடும் நிறுவனங்களின் விகிதத்தைக் கழிப்பதன் மூலம் ‘மேன்பவர் குரூப்’ நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டத்தைக் கணக்கிடுகிறது.
ஆட்சேர்ப்புக்குத் திட்டமிடும் நிறுவனங்கள் அதற்குக் கூறிய முக்கியக் காரணங்கள், நிறுவன விரிவாக்கமும் போட்டித்தன்மையுடன் விளங்குவதற்குத் தேவைப்படும் திறன்களுமாகும்.
பொருளியல் சவால்கள், சந்தை மாற்றத்துக்கேற்ப மாறவேண்டிய தேவை ஆகியவை ஆட்குறைப்புக்குக் காரணங்களாகக் கூறப்பட்டன.