மறந்து கைவிடப்பட்ட பொருள் பற்றி அதிக புகார்கள்

2 mins read
2fe7cdc8-b590-45ea-90f6-b7b953e1b837
கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுமக்கள் மறந்து விட்டுச் செல்லும் பொருள்கள் பற்றி காவல்துறைக்கு அதிக புகார்கள் வந்துள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே கண்டுபிடிக்கப்பட்டப் பொருள் பற்றி பொதுமக்கள் அளித்துள்ள புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

2023, 2024ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் ஏறக்குறைய 50,000 புகார்கள் வந்துள்ளதாகவும் 2022ஆம் ஆண்டில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டப் பொருள்கள் பற்றி 42,000 புகார்கள் வந்ததாகவும் காவல்துறையின் கண்டுபிடிக்கப்படும், கோரப்படாதப் பொருள்களின் அலுவலகம் ( Found and Unclaimed Property Office: எஃப்யுபிஒ) தெரிவித்தது.

கண்டுபிடிக்கப்பட்டப் பொருள்களில் 50 விழுக்காட்டுக்கு மேல் அவர்களது உரிமையாளர்களிடம் வெற்றிகரமாக ஒப்படைக்கப்பட்டது என்று பிப்ரவரி 20ஆம் தேதி வெளியிட்ட தகவலில் காவல்துறை கூறியது.

குலிமார்ட் ரோட்டுக்கு அருகில் ஹெம்மந்த் சாலையில் உள்ள காவல்துறை தளவாடங்களின் தளத்தில் அந்த அலுவலகத்தின் செயல்பாடு குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கப்பட்டது.

ஏடிஎம் வங்கி அட்டைகளும் கோரப்படாதப் பொருள்களில் அடங்கும். சில உரிமையாளர்கள், காணாமல் போன பிறகு அவற்றை ரத்து செய்து புதிய அட்டையைப் பெறுவதால் அதனை அழித்துவிடுங்கள் என்று காவல்துறையிடம் கூறிவிடுகின்றனர்.

2009ல் எஃப்யுபிஓ நிறுவப்பட்டபோது, ​​கண்டுபிடிக்கப்பட்டப் பொருள்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடித்து ஒப்படைப்பது அதிக நேரமெடுக்கும் சிரமமானப் பணியாக இருந்தது. அலுவலகத்தின் ஊழியர்கள், காணாமல்போனப் பொருள்களின் தரவுகளில் இடம்பெற்றுள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு உரிமையாளர்களைக் கண்டுபிடிக்கப் பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருந்தது.

இன்று, குறைவான ஊழியர்கள் அப்பணிக்குத் தேவைப்படுகின்றனர்.

2021ஆம் ஆண்டில் எஃப்யுபிஓ, அதன் செயலாக்கப் பிரிவை மேம்படுத்தியதே அதற்கு காரணம்.

கண்டுபிடிக்கப்பட்டப் பொருள்களை நிர்வகித்து நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இரண்டு மடங்குக்கு அதிகரித்துள்ளது.

எஃப்யுபிஓ பொறுப்பு அதிகாரியான முஹமட் ஹுசைய்னி அப்துல்லா, கண்டுபிடிக்கப்பட்டப் பொருள்களை கையாள செயற்கை நுண்ணறிவு, தானியக்க இயந்திரங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

“இது, நிர்வாகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கண்டுபிடிக்கப்பட்டப் பொருள்கள் அவற்றின் உண்மையான உரிமையாளர்களுக்கு திருப்பித் தரப்படுவதை உறுதிசெய்ய உதவுகிறது,” என்றார் அவர்.

ஒவ்வொரு நாளும், எஃப்யுபிஓ ஓட்டுநர்கள், கண்டுபிடிக்கப்பட்டப் பொருள்களைத் திரட்டி, தீவு முழுவதும் உள்ள 56 அக்கம்பக்கக் காவல் சாவடிகளிலும் 32 அக்கம்பக்கக் காவல் நிலையங்களிலும் பூட்டிய பெட்டகங்களில் அல்லது மாற்றமுடியாத பைகளில் பாதுகாப்பாக வைக்கின்றனர். வேன்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கண்காணிப்புக் கேமரா மூலம் பொருள்கள் கண்காணிக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைபயன்படுத்திய பொருள்கள்கண்டுபிடிப்பு