சிங்கப்பூரின் 19 முக்கிய போக்குவரத்து நிறுவனங்கள்மீது புதிய சட்டத்தின்கீழ் கூடுதல் கட்டுப்பாடு

2 mins read
e7bcb0f9-4382-4122-9862-8a13e66ae394
ஏப்ரல் 1 முதல் அறிமுகம் காணும் போக்குவரத்துத் துறை (முக்கிய நிறுவனங்கள்) சட்டம், சிங்கப்பூரின் நிலம், நீர், ஆகாயப் போக்குவரத்து துறைகள்மீது அரசாங்கத்துக்குக் கூடுதல் அதிகாரம் தருகிறது. - கோப்புப் பாடம்

சிங்கப்பூரின் போக்குவரத்து துறையில் இருக்கும் 19 முக்கிய நிறுவனங்கள் புதிய சட்டத்தின்கீழ் இன்னும் தீவிரமானக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும். எஸ்பிஎஸ் டிரான்ஸிட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிஎஸ்ஏ ஆகியவை அவற்றுள் அடங்கும்.

ஏப்ரல் 1 முதல் அறிமுகம் காணும் போக்குவரத்துத் துறை (முக்கிய நிறுவனங்கள்) சட்டம், சிங்கப்பூரின் நிலம், நீர், ஆகாயப் போக்குவரத்து துறைகள்மீது அரசாங்கத்துக்குக் கூடுதல் அதிகாரம் தருகிறது. அதன் மூலம் மாறுபட்ட தாக்கங்களிலிருந்தும் இடையூறுகள் ஏற்படுவதிலிருந்தும் முக்கிய போக்குவரத்துச் சேவைகள் பாதுகாக்கப்படும்.

அரசாங்க அரசிதழில் சட்டத்துக்குட்படும் போக்குவரத்து நிறுவனங்களின் பட்டியல் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

போக்குவரத்து நிறுவனங்கள் இரண்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் நேரடியான முக்கிய போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள். மற்றொன்று முக்கியப் போக்குவரத்து சேவைகள் தொடர்பிலான தீர்மானங்கள்மீது கட்டுப்பாடும் தாக்கமும் கொண்ட நிறுவனங்கள்.

இரண்டாம் பிரிவில் பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டியும் பிஎஸ்ஏ இன்டர்நே‌‌ஷனல் நிறுவனமும் உள்ளன.

சிங்கப்பூரில் நேரடியான முக்கியப் போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஐந்து நிலப் போக்குவரத்து நிறுவனங்கள். அவற்றுள் எஸ்பிஎஸ் ட்ரான்சிட், எஸ்எம்ஆர்டி பேருந்துகள், எஸ்எம்ஆர்டி ரயில்கள் ஆகியவை அடங்கும்.

விமானப் போக்குவரத்துத் துறையில் 9 நிறுவனங்கள் நேரடி சேவை வழங்கும் நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சாங்கி விமான நிலையம் குழுமம் (சிங்கப்பூர்), சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், சேட்ஸ் சேவைகள், எஸ்ஐஏ பொறியியல் ஆகிய நிறுவனங்கள் அவற்றுள் சில.

போக்குவரத்துத் துறை (முக்கிய நிறுவனங்கள்) சட்டம் மூலம் சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம், கடல்துறை, துறைமுக ஆணையம் ஆகியவை பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மீது கூடுதல் அதிகாரம் கொண்டிருக்கும்.

குறிப்புச் சொற்கள்