250,000 உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட சுகாதாரச் சேவைகள்

250,000 உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட சுகாதாரச் சேவைகள்

2 mins read
f1d2796f-2a48-4441-98b0-5fce7b95dd35
உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்களுக்கு மேலும் எளிதில் அணுகக்கூடிய சுகாதாரச் சேவைகள் அறிமுகம் காணவுள்ளன. - படம்: தேசிய சுகாதாரக் குழுமம்

உட்லண்ட்ஸ் வட்டார வாசிகளுக்கு எளிதில் அணுகக்கூடிய சுகாதாரச் சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையின் தகவல்களின்படி, உட்லண்ட்சில் மொத்தம் 250,000 குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர்.

தேசிய சராசரியான 8.8 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் நீரிழிவு பாதிப்பு 10.5 விழுக்காடாக உள்ளது.

உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பு, தேசிய சராசரியான 33 விழுக்காடுடன் ஒப்பிடுகையில் வடக்கில் 35.9 விழுக்காடாக உள்ளது.

இந்நிலையில், உட்லண்ட்ஸ் பகுதியில் சமூகச் சுகாதாரச் சாவடிகள் மேம்படுத்தப்படும் என்று சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய அவர், இந்த ஆண்டிலிருந்து தேசிய சுகாதாரக் குழுமம் உட்லண்ட்சில் 11 சமூகச் சுகாதாரச் சாவடிகளைப் படிப்படியாக மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

துடிப்பான மூப்படைதல் நிலையங்களுக்குள் அமைந்துள்ள அந்தச் சாவடிகளில் மூத்தோர் உட்பட குடியிருப்பாளர்கள் பொதுவான சுகாதார ஆலோசனை, பராமரிப்பாளர் ஆதரவு, சுகாதார வழிகாட்டுதல், மருந்து மதிப்பாய்வு, நாட்பட்ட நோய், உடல் தளர்வு மேலாண்மைத் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆதரவைப் பெற முடியும்.

வேலைப்பளு காரணமாக அல்லது நடமாடுவதில் சிரமத்தை எதிர்நோக்கும் சில நோயாளிகள், நிபுணத்துவ மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதைத் தவறவிடுகின்றனர்.

இதை நிவர்த்திசெய்ய, உட்லண்ட்ஸ் மருத்துவமனை அந்த வட்டாரத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட சமூகச் சுகாதாரச் சாவடிகள் மூலமும் தனிநபர்களுக்கான நேரடித் தொலைதூர மருத்துவ ஆலோசனை வாயிலாகவும் நோயாளிகளுக்கு நிபுணத்துவ மருத்துவர் ஆதரவுடனான கவனிப்பை வழங்குவதற்கான புதிய முயற்சியை மார்ச் இறுதியில் தொடங்கவுள்ளது.

முதற்கட்டமாக, ஆஸ்துமா, நீரிழிவுக்காக மருத்துவரிடம் ஆலோசனை பெற உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குச் செல்வதற்குப் பதிலாக, மருத்துவமனைக் கவனிப்புக் குழுவுடனான தொலைதூர மருத்துவ ஆலோசனையின் மூலம் மேம்படுத்தப்பட்ட சமூகச் சுகாதாரச் சாவடியில் நிபுணத்துவ மருத்துவர் ஆதரவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகள் கவனிப்பைப் பெறலாம்.

குறிப்புச் சொற்கள்