பிடிஓ வீடுகளுக்கான வருமான உச்சவரம்பை உயர்த்துவதால் அதிகமான குடும்பங்கள் தகுதி பெறும்

பிடிஓ வீடுகளுக்கான வருமான உச்சவரம்பை உயர்த்துவதால் அதிகமான குடும்பங்கள் தகுதி பெறும்

2 mins read
7b8d2541-8a7f-45d8-a2c4-72ba2c045994
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) முதல், தகுதியுள்ள குடும்பங்கள் புதிய வருமான உச்சவரம்பின் கீழ், பிடிஓ வீடுகளுக்கான வீவக வீட்டுத் தகுதிக் கடிதம், மறுவிற்பனை வீடுகளுக்கான மத்திய சேம நிதி வீடமைப்பு மானியம் மற்றும் வீவக கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்கான (பிடிஓ) மாதாந்தர குடும்ப வருமான உச்சவரம்பை $16,000 ஆக உயர்த்துவது, பத்து சிங்கப்பூர் குடும்பங்களில் எட்டு குடும்பங்கள் மானிய விலையில் வீடுகளைப் பெறுவதற்குத் தகுதி பெறுவதை உறுதி செய்யும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தெரிவித்தார்.

அவர் தமது ஃபேஸ்புக் பதிவில், “இந்த உயர்த்தப்பட்ட வருமான உச்சவரம்பு, வருமான வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவும் பத்து சிங்கப்பூர் குடும்பங்களில் எட்டு குடும்பங்கள் மானிய விலையில் பொது வீடமைப்புக்குத் தொடர்ந்து தகுதி பெறுவதை உறுதி செய்யவும் நமக்கு உதவுகின்றன,” என்று கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தினப் பேரணியில் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், அதிகமான சிங்கப்பூர் தம்பதிகள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்வதால், 2019ல் கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட $14,000 என்ற வருமான உச்சவரம்பைத் தாண்டிவிடுகிறார்கள் என்று கூறினார்.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) முதல், தகுதியுள்ள குடும்பங்கள் புதிய வருமான உச்சவரம்பின் கீழ், பிடிஓ வீடுகளுக்கான வீவக வீட்டுத் தகுதிக் கடிதம், மறுவிற்பனை வீடுகளுக்கான மத்திய சேம நிதி வீடமைப்பு மானியம் மற்றும் வீவக கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

35 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர் தனிநபர்களுக்கான வருமான உச்சவரம்பும் $7,000லிருந்து $8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளுக்கான வருமான உச்சவரம்பும் $16,000லிருந்து $18,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுடன் அல்லது குழந்தைகளை எதிர்பார்க்கும் முதல் முறை வீடு வாங்கும் குடும்பங்களுக்கு, 18 மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய ஒவ்வொரு சிங்கப்பூர் குழந்தைக்கும் கூடுதலாக ஒரு வீவக குலுக்கல் வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் வோங் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இந்தக் கூடுதல் குலுக்கல் வாய்ப்புகள், பிரைம், பிளஸ் வீடுகளுக்கான விண்ணப்பங்கள், எஞ்சியுள்ள வீடுகளை விற்பனை செய்யும் திட்டங்கள் உட்பட அனைத்து விண்ணப்பங்களுக்கும் பொருந்தும் என்று திரு சீ தெரிவித்தார்.

இது, பிப்ரவரி 2027 விற்பனை நடவடிக்கையிலிருந்து அமலுக்கு வரும்.

தமது ஃபேஸ்புக் பதிவில் திரு சீ, தேசிய வளர்ச்சி அமைச்சின் அதிகாரிகளுக்கும், தொழில் பங்காளிகளுக்கும் அவர்களின் பணி, ஆதரவிற்காக நன்றி தெரிவித்தார்.

“கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட தாமதங்களைச் சரிசெய்வதும், பின்னர் புதிய வீடுகளின் வலுவான விநியோகத்தைத் தக்கவைப்பதும் ஓர் எளிதான பயணமாக இருக்கவில்லை,” என்றார்.

கவனமான நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலுடன் இணைந்து, அரசாங்கம் மேலும் அதிகமான அடுக்குமாடி வீடுகளை விரைவாகக் கட்டும் என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
வீவகமறுவிற்பனைமத்திய சேம நிதிமானியம்