வீவக குடியிருப்புகளில் கூடுதல் விரைவான மின்வாகன மின்னூட்டுச் சேவை

வீவக குடியிருப்புகளில் கூடுதல் விரைவான மின்வாகன மின்னூட்டுச் சேவை

2 mins read
58bdc633-833a-4f48-86e6-bc04674bdb71
வீவக குடியிருப்புகளில் கூடுதல் மின்னூட்டுச் சேவை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இவ்வேளையில் போக்குவரத்து அமைச்சு 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒவ்வொரு வீவக குடியிருப்பிலும் குறைந்தபட்சம் ஒரு விரைவான மின்சார வாகன மின்னூட்டுச் சேவை மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் ஆறு விரைவு மின்னூட்ட இடங்கள் அமைக்கப்பட்டிருக்கும் என்று புதன்கிழமை (மார்ச் 4) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய திருவாட்டி சுன் தெரிவித்தார்.

தற்போது தீவு முழுவதும் 21 விரைவு மின்சார வாகன மின்னூட்டுச் சேவை மையங்கள் உள்ளன. கூடுதலாக 20 விரைவு மின்சார வாகன மின்னூட்டுச் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

அவை வீவக வாகன நிறுத்துமிடங்கள், விளையாட்டு வளாகங்களில் உள்ள அடிப்படை, வாழ்க்கைமுறை வசதிகளுக்கு அருகில் அமைந்திருக்கும்.

மெக்பர்சன் சந்தை அருகில், புக்கிட் கேன்பரா விளையாட்டு நிலையம் போன்ற போதுமான மின்சாரத் திறன், அதிக மின்வாகன மின்னூட்டுச் சேவைக்கான தேவையைக் கொண்ட இடங்களில் அவை முதலில் அறிமுகப்படுத்தப்படும்.

மேலும், மின்சார வாகனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள புதிய திறன் பாதை அறிமுகம் காணவுள்ளது.

தகுதிபெறும் தனிநபர்களும், ஊழியர்களும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளுக்குக் குறைந்தபட்சம் 50 விழுக்காடு கட்டண மானியங்களைப் பெறுவார்கள்.

சிங்கப்பூர் வாகன, பொதுப் போக்குவரத்து துறைகள் மின்மயமாகி வருவதால் திறன்மிக்க மின்சார வாகன நிபுணர்களுக்கான வளர்ந்து வரும் தேவையை இது பூர்த்தி செய்யும்.

போர்னியோ மோட்டார்ஸ், பிஒய்டி, சைக்கிள் & கேரேஜ், கோமோகோ உள்ளிட்ட முக்கிய வாகனத்துறை நிறுவனங்கள் இந்த முன்முயற்சியை ஆதரிக்கின்றன.

இந்த வழிகாட்டித் திட்டமானது தொழில்நுட்ப வல்லுநர் முதல் பொறியாளர் வரையிலான நன்கு கட்டமைக்கப்பட்ட நான்கு படிநிலைகளைக் கொண்டுள்ளது.

தொழில்துறையின் கருத்துகள், தேவைகளின் அடிப்படையில் இதற்கான பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்