விரைவாக உண்ணக்கூடிய தயார்நிலை உணவுப் பொருள்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தனது 16 கடைகளில் ‘ஃபுட்பார்’ எனும் விரைவுணவுப் பகுதியை ‘7-லெவன்’ நிறுவனம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) அறிமுகப்படுத்தியது.
பெரிய அளவிலான விரைவுணவுப் பகுதியைக் கொண்ட கடைகளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த சோறு, பாஸ்தா அல்லது நூடுல்சுடன் சுவையூட்டிகள் அடங்கிய உணவுகளை $4.50 முதல் தேர்வு செய்யலாம். வாட்டிய கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு ‘ஹேஷ் பிரவுன்’, கோழி ‘கட்லெட்’ ஆகிய தெரிவுகளும் உண்டு.
சிறிய கடைகளில் பிட்சா, வாஃபிள், குரோசான் போன்ற சூடான சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படும்.
புதிய அனுபவங்கள் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் இம்மாற்றங்களை 7-லெவன் செய்துள்ளது.
பரபரப்பான வாழ்க்கை முறையால் வாடிக்கையாளர்கள் விரைவு உணவுகளை அதிகம் விரும்புவதும், அத்தகைய உணவுகள் குறித்த நேர்மறையான கருத்துகள் கடந்த மூன்றாண்டுகளில் அதிகரித்துள்ளதும் 7-லெவன் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் இணையம் வழியாக நடத்தப்பட்ட அந்த ஆய்வில், முந்தைய மாதத்தில் விரைவு உணவுகளை வாங்கிய சிங்கப்பூரைச் சேர்ந்த 1,020 வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
சிங்கப்பூரில் தயார்நிலையில் உள்ள உணவுப்பொருள்களின் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதாக 7-லெவன் சிங்கப்பூர் நிர்வாக இயக்குநர் அனுஸ்ரீ கோஸ்லா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
ஜப்பான், தைவான், தாய்லாந்து போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அங்குள்ள கடைகளில் கிடைக்கும் உணவு அனுபவங்களை உள்ளூர் வாடிக்கையாளர்களும் பெற விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஹலால் சான்றிதழ் பெற்ற கொரிய ‘கிம்பாப்’, ‘ஒனிகிரி’, தாய்லாந்து பாணி டோஸ்ட் உணவுகள் உட்பட 130க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள் இங்கு வழங்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் 450 கடைகளைக் கொண்டுள்ள 7-லெவன் நிறுவனத்தின் தாய் குழுமமான டிஎஃப்ஐ, தனது வணிகத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. அண்மையில் சிங்கப்பூரில் உள்ள ஸ்டார்பக்ஸ் உரிமத்தின் முழுப் பங்கையும் பெற்ற இக்குழுமம், கார்டியன் கடைகள் மூலம் சுகாதாரப் பராமரிப்புப் பொருள்களின் விற்பனையையும் அதிகரித்துள்ளது.
