தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையர்களைப் பராமரிக்கும் வளர்ப்புப் பெற்றோருக்குக் கூடுதல் நிதியுதவி

3 mins read
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அறிவிப்பு
24b3cae2-8865-4f54-b739-bab6153f2959
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் வளர்ப்பு, பராமரிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகை அளித்தார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பதின்மூன்று வயது, அதற்கு மேற்பட்ட பதின்மவயது இளையர்களைப் பராமரிக்கும் வளர்ப்புப் பெற்றோருக்கான மாதாந்தர படித்தொகையை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அதிகரிக்கவுள்ளது.

சிறப்பு அல்லது மருத்துவத் தேவையுடைய இளையர்களைப் பராமரிக்கும் வளர்ப்புப் பெற்றொருக்கு மாதாந்தர படித்தொகையும் அதிகரிக்கும்.

தற்போது, வளர்ப்புப் பெற்றோருக்கு மாதந்தோறும் $1,100 வழங்கப்படுகிறது. இத்தொகை $1,300க்கு அதிகரிக்கும்.

சிறப்பு அல்லது மருத்துவ தேவையுடைய இளையர்களைப் பராமரிப்போருக்கான படித்தொகை $1,800ஆக அதிகரிக்கும். தற்போது அவர்கள் $1,500 பெறுகின்றனர்.

இந்த மாற்றங்கள் வரும் அக்டோபரில் நடப்புக்கு வரும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங் தெரிவித்தார்.

சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் வளர்ப்புப் பராமரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் ஆற்றிய உரையில் இந்த மாற்றங்களை அறிவித்தார்.

“பதின்ம வயதினரைப் பராமரிக்கும் வளர்ப்புக் குடும்பங்களின் எண்ணிக்கையை அமைச்சு அதிகரிக்க விரும்புகிறது,” என்றார் திரு கோ.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 630 வளர்ப்புக் குடும்பங்கள் இருந்தன. இந்த எண்ணிக்கை, பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இருமடங்கு அதிகம் என்பதை அவர் சுட்டினார்.

“இந்த புதிய மாற்றங்கள் மேலும் பல புதிய வளர்ப்புப் பெற்றோரை ஈர்க்கும் என நான் நம்புகிறேன்,” என்றார் திரு கோ.

வளர்ப்புப் பெற்றோராக விண்ணப்பிக்கும் தம்பதியருக்கான விதிகளில் குறைந்தபட்ச குடும்ப வருமானமும் கல்வித் தகுதிகளும் இவ்வாண்டு ஜூலை முதல் நீக்கப்பட்டன.

பாதுகாப்பான, நிலையான வளர்ப்புச் சூழலை வழங்கும் திறன், வருமானம் அல்லது கல்வித் தகுதிகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை இந்த மாற்றங்கள் காட்டுவதாக அமைச்சு சொன்னது.

“வளர்ப்புப் பெற்றோர் பலரும் இயல்பாகவே குழந்தைகளைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டினாலும் ஆரோக்கியமான குடும்பச் சூழலால் பதின்மவயதினரும் பெரிதும் பயனடைகிறார்கள்,” என்று திரு கோ கூறினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் திரு பாஸ்கர் பெரி, 46, திருவாட்டி பெரி ஹேமா, 53, தம்பதியரும் அடங்குவர். 2018 முதல், ஒரு பதின்மவயது இளையரை அவர்கள் பராமரித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு முன்பே குழந்தையை தத்தெடுப்பது குறித்து தங்களுக்கு யோசனை எழுந்ததாக திருவாட்டி பெரி நினைவுகூர்ந்தார்.

“மற்ற பெற்றோரைப்போலவே, எங்களுக்கும் எங்கள் வளர்ப்பு மகளுடன் குறைந்தது ஆறு மாதங்களுக்கு சவால்கள் இருந்தன,” என்று சொன்ன அவர், குறிப்பாக, மனநலம் சார்ந்த சவால்களுக்கு அதிக கவனம் தேவைப்பட்டது என்றார்.

இருப்பினும், தங்கள் வளர்ப்பு மகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க கால அவகாசம் தேவை என்று தாங்கள் உணர்ந்ததாக திரு பாஸ்கர் கூறினார்.

“இந்த அனுபவம் எங்களுக்கும் ஒரு கற்றல் களமாக அமைகிறது,” என்றார் அவர்.

மனநலம் சார்ந்த சவால்களை எதிர்கொள்ளும் பதின்மவயது இளையர்களுக்குக் கூடுதல் உதவி தங்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று இத்தம்பதியர் கருதினர்.

சிறப்புத் தேவையுடைய ஒரு பதின்மவயது இளையரைப் பராமரித்துவரும் திரு சண்முகன், 78, திருவாட்டி பக்கிரிசாமி லட்சுமி, 75, தம்பதியர், பிள்ளை வளர்ப்பு என்பது ஒருபோதும் பணத்தைப் பற்றியதன்று எனக் கூறினர்.

“பிள்ளைகளை வளர்ப்பதற்கு முதலில் ஆர்வமும் அன்பும்தான் தேவை,” என்றார் திருவாட்டி லட்சுமி.

உலகளாவிய வளர்ச்சித் தாமதநிலையை (global developmental delay) கொண்டிருக்கும் பதின்மவயது இளையரைக் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகப் பராமரித்துவரும் இருவருக்கும் முன்பு குழந்தைகளைப் பராமரிப்பதில் அனுபவம் இருக்கிறது.

நான்கு பிள்ளைகளுக்குப் பெற்றோரான இந்தத் தம்பதியரின் மூத்த மகனும் தற்போது ஒரு வளர்ப்புப் பெற்றோராக உள்ளார் என்று திருவாட்டி லட்சுமி தெரிவித்தார்.

சிறப்புத் தேவையுடைய தங்கள் வளர்ப்புப் பிள்ளைக்கு பேச்சுப் பயிற்சிக்கும் தனிப்பட்ட இணைப்பாட வகுப்புகளுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றார் திரு சண்முகன்.

“இருப்பினும், வளர்ப்புப் பெற்றோருக்கு தற்போது கிடைக்கும் ஆதரவு, உதவி எங்களை பொறுத்தவரை போதுமானவை,” என்று அவர் கருதினார்.

குறிப்புச் சொற்கள்
இளையர்வளர்ப்புப் பெற்றோர்சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு