அதிகச் சம்பளம் அளிக்கும் முழுநேர வேலைகளில் அதிகமான பட்டதாரிகள் சென்ற ஆண்டு அமர்த்தப்பட்டனர். கிருமித் தொற்றிலிருந்து சிங்கப்பூர் மீண்டு வருவதும் சிங்கப்பூரின் பொருளியல் மீட்சி அடைந்து வருவதும் இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது.
புதிய பட்டதாரிகளில் 87.5 விழுக்காட்டினர் முழுநேரப் பணியில் இருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது. ஒப்புநோக்க, 2021ஆம் ஆண்டு இவ்விகிதம் 84 விழுக்காடு.
முழுநேர வேலையில் உள்ள பட்டதாரிகளின் சம்பளம் $3,800லிருந்து $4,200 வெள்ளியாக சென்ற ஆண்டு அதிகரித்தது.
பட்டம் பெற்ற ஆறு மாதங்களில் 93.8 விழுக்காட்டுப் பட்டதாரிகள் முழுநேர, பகுதிநேர அல்லது தன்னுரிமைத் தொழிலில் ஈடுப்பட்டனர்.
தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சுகாதார அறிவியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் முழுநேரப் பணிகளில் அதிகமாக அமர்த்தப்பட்டனர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்(NTU), சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம்(SMU), சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (SUSS) ஆகிய பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்ற 12,100 மாணவர்கள் ஆய்வில் கலந்துகொண்டனர்.


