தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூடுதலான புதிய பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்தது: மனிதவள அமைச்சு

2 mins read
f5766e59-8973-4ebb-9e74-ff1c8270d1c2
2025 ஜூன் மாத நிலவரப்படி, புதிதாகப் பட்டம்பெற்ற 9,300 உள்ளூர்வாசிகள் பணியில் சேர்ந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

இவ்வாண்டு பட்டம்பெற்ற மாணவர்களில், முந்தைய ஆண்டைவிட அதிகமானோர் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவுடன் வேலையில் சேர்ந்துள்ளனர். அவர்களில் குறைவானவர்களே இடைவேளை எடுத்துக்கொண்டனர் அல்லது மேற்படிப்புக்குச் சென்றனர்.

மனிதவள அமைச்சு அதன் இரண்டாவது காலாண்டுக்கான ஊழியர் சந்தை அறிக்கையை புதன்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்டது. அத்துடன், புதிதாகப் பட்டம் பெற்றவர்களின் வேலை நியமனத் தரவையும் அது முதல்முறையாக வெளியிட்டது.

2025 ஜூன் மாத நிலவரப்படி, புதிதாகப் பட்டம்பெற்ற 9,300 உள்ளூர்வாசிகள் பணியில் சேர்ந்தனர். இது, 51.9 விழுக்காட்டு வேலை நியமன விகிதமாகும். முந்தைய ஆண்டில் 8,600 பட்டதாரிகள் பணியில் சேர்ந்தனர். அவர்களின் வேலை நியமன விகிதம் 47.9 விழுக்காடாக இருந்தது.

வேலை விளம்பரங்களின் அடிப்படையில் நிபுணர், மேலாளர், நிர்வாகி, தொழில்நுட்ப (பிஎம்இடி) தொடக்கநிலைப் பணிகளில் அதிகமான காலிப் பணியிடங்களின் பட்டியலையும் அமைச்சு வெளியிட்டது.

ஜூன் நிலவரப்படி, ஏறக்குறைய 4,300 வேலைகள் காலியாக இருந்தன.

ஆய்வு, மேம்பாட்டு மேலாளர் பதவிக்கு அதிகத் தேவை இருந்தது. அதில் 510 இடங்கள் காலியாக இருந்தன.

கட்டடக் கட்டுமானப் பொறியாளர்கள், கணக்கீட்டாளர்கள், ஆய்வு அதிகாரிகள், தாதியர், சமூகப் பணியாளர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள் போன்ற பிற வேலைகளிலும் அதிகக் காலியிடங்கள் இருந்தன. இவற்றில் மொத்தம் கிட்டத்தட்ட 1,700 காலியிடங்கள் இருந்தன.

முக்கிய ஊழியர் சந்தை அறிக்கையில், இரண்டாவது காலாண்டில் வேலையிழந்த சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் புதிய வேலையில் சேர்வதற்கு ஆறு மாதங்களுக்குமேல் ஆனது என்று அமைச்சு கூறியது.

ஆறு மாதங்களுக்குள் வேலையில் சேர்ந்தவர்களின் விகிதம், முதல் காலாண்டில் 60.6 விழுக்காட்டிலிருந்து இரண்டாவது காலாண்டில் 56.3 விழுக்காடாகக் குறைந்தது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் அளவை ஒத்திருந்தது.

இருப்பினும், வேலை இழந்தவர்களில் பத்தில் ஏழு பேருக்குமேல் இரண்டாவது காலாண்டில் 12 மாதங்களுக்குள் வேலை கிடைத்தது. இதுவும் அண்மைய முடிவுகளை ஒத்து உள்ளது.

மொத்தமாக, இரண்டாவது காலாண்டில் கூடுதலாக 10,400 பேர் பணியில் இருந்தனர். இவர்களில் 2,600 சிங்கப்பூர்வாசிகளும் 7,800 வெளிநாட்டவர்களும் அடங்குவர். முதல் காலாண்டில் 200 சிங்கப்பூர்வாசிகளுடனும் 2,000 வெளிநாட்டவர்களுடனும் ஒப்பிடும்போது, இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும்.

குறிப்புச் சொற்கள்