ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஜெட்ஸ்டார் ஏஷியா விமான நிறுவன ஊழியர்களின் சுமார் 900 வேலை விண்ணப்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அதாவது 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்று வேலைகள் கிடைத்துள்ளன அல்லது வேலை தொடர்பான நேர்காணல்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன.
ஜெட்ஸ்டார் ஏஷியாவின் தலைமை நிர்வாகி திரு ஜான் சிமியோன், விமான நிறுவனத்தின் கடைசி செயல்பாடுகள் நாளான ஜூலை 31ஆம் தேதியன்று, சாங்கி விமான நிலைய முனையம் 4ல் உள்ள ஜெட்ஸ்டார் ஏஷியாவின் பணியாளர்கள் ஓய்வறைக்கு வெளியே ஒரு நேர்காணலில் இந்த புள்ளிவிவரங்களை வழங்கினார்.
வெற்றிகரமான அல்லது நிலுவையில் உள்ள வேலை விண்ணப்பங்கள் 54 விழுக்காட்டைத் தவிர, மீதமுள்ள ஊழியர்கள் தற்காலிக ஒய்வில் உள்ளனர் அல்லது மாற்று வேலைகளைத் தேடுகிறார்கள் அல்லது அவர்கள் அனுப்பிய வேலை விண்ணப்பங்கள் குறித்து எந்த பதிலும் கிடைக்காமல் இருக்கிறார்கள்.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட மலிவுக் கட்டண விமான நிறுவனம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிய தனது செயல்பாடுகளை ஜூலை 31ஆம் தேதி நிறுத்துவதாக, ஜூன் 11ஆம் தேதி அறிவித்தது. அதிகரித்து வரும் செலவுகள், வளர்ந்து வரும் போட்டித்தன்மை ஆகியவை அதன் மூடலுக்கான காரணங்களாகக் கூறப்பட்டன.
100க்கும் மேற்பட்ட விமானிகள், சுமார் 300 விமானச் சிப்பந்திகள் உட்பட 500க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டார்கள்.
ஜெட்ஸ்டார் ஏஷியா மூடல் அறிவிப்பு வெளியான சில நாள்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட ஊழியர்களை புதிய வேலைகளில் ஈடுபடுத்த தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் விமானப் போக்குவரத்து சமூகம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டன.
2004ஆம் ஆண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்கியபோது, சிங்கப்பூரில் முன்னோடி மலிவுக் கட்டண விமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்த ஜெட்ஸ்டார் ஏஷியா, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மக்களுக்கான பயணத்தை எளிமைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அது அமைந்தது என்று திரு சிமியோன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் ஒழுங்குமுறை செயல்முறைகளைக் கையாள அக்டோபர் இறுதி வரை சுமார் 70 ஜெட்ஸ்டார் ஏஷியா ஊழியர்கள் சிங்கப்பூரில் இருப்பார்கள் என்றும், அவர்களில் சுமார் 30 பேர் அலுவலக மூடல் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு உதவ டிசம்பர் இறுதி வரை இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.