கலிமந்தானிலும் சுமத்ராவிலும் இந்த வாரம் காட்டுத் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை கூடியிருப்பதால், சிங்கப்பூருக்கு எல்லை தாண்டிய புகைமூட்டம் மீண்டும் திரும்பும் அபாயம் அதிகரித்துள்ளது. இருப்பினும், கடும் புகைமூட்டம் ஏற்படும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கலிமந்தானில் காட்டுத் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை 93க்கும், சுமத்ராவில் அது 62க்கும் அதிகரித்திருப்பதாக ஆசியானுக்கான வானிலை, பருவநிலைச் சேவைகள் அமைப்பு தெரிவித்தது. கடந்த ஏழு நாள்களில் பதிவாகியிருக்கும் ஆக அதிக எண்ணிக்கை அவை.
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, சிங்கப்பூரின் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு மிதமான அளவில் 73ஆக இருந்தது.
1997, 2013, 2015ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட அளவிற்கு இம்முறை புகைமூட்டம் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கூறினர்.