குப்பைப் பையில் நூற்றுக்கும் மேற்பட்ட காடைக் குஞ்சுகள்

1 mins read
4c0f0353-e11b-4f5f-a0fe-e4efd99780d8
குப்பைத் தொட்டியில் இருந்த காடைக் குஞ்சுகள். - படம்: ஏக்கர்ஸ்

லிம் சூ காங் வட்டாரத்தில் நூற்றுக்கும் அதிகமான காடைக் குஞ்சுகள் உயிருடன் ஒரு குப்பைத் தொட்டியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

அக்டோபர் 27ஆம் தேதி குப்பைத் தொட்டியில் இருந்த காடைக் குஞ்சுகள் மீட்கப்பட்டன.

இது குறித்து ஏக்கர்ஸ் (Acres) வனவிலங்கு மீட்பு நிலையம் சமூக ஊடகம் வழியாகத் தெரிவித்தது.

“குப்பைத் தொட்டியில் இருந்து பறவைகள் சத்தம் கேட்பதாக ஒருவர் ஏக்கர்ஸ் அமைப்பை தொடர்புகொண்டார். அதைத் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் சென்றனர்.

“குப்பைத் தொட்டிக்குள் கறுப்புப் பை ஒன்றில் 100க்கும் அதிகமான காடைக் குஞ்சுகள், முட்டைகள் இருந்தன. அவற்றில் சில இறந்த நிலையில் இருந்தன.

“குப்பைப் பையில் 106 காடைக் குஞ்சுகள் இருந்தன. அவற்றைக் காப்பாற்ற முடிந்தளவு போராடினோம் ஆனாலும், அவை அனைத்தும் இறந்துவிட்டன,” என்று ஏக்கர்ஸ் தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க தேசிய பூங்காக் கழகத்திடம் தகவல் அளித்துள்ளதாகவும் ஏக்கர்ஸ் கூறியது.

எதனால் இத்தனை காடைக் குஞ்சுகளும் முட்டைகளும் கைவிடப்பட்டன என்ற கோணத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விலங்குகள், பறவைகளைக் கைவிடப்பட்ட நிலையில் விட்டுச் செல்பவர்களுக்கு 18 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை, 15,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்