சிங்கப்பூரில் அதிகமான வீட்டு உரிமையாளர்கள் வாடகை வருமானத்தை உயர்த்தும் நோக்கில், தங்களது வீடுகளைப் பலருக்கு வாடகைக்கு விடும் வகையில் மாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டில் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அத்தகைய கோரிக்கைகள் நான்கு மடங்குவரை அதிகரித்ததாகப் பகிர்வுக் குடியிருப்புச் சொத்துகளை நிர்வகிக்கும் சில நிறுவனங்கள் தெரிவித்தன.
பல்லாண்டுகளாக உயர்ந்துவந்த தனியார் வீட்டு வாடகைச் சந்தை தற்போது நிலையாகி இருப்பதால், வீட்டு உரிமையாளர்கள் பாரம்பரியமாக ஒரே நபருக்கோ குடும்பத்திற்கோ வாடகைக்கு விடும் முறையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
அந்த மாற்றத்தை மேற்கொள்ளும் சொத்து உரிமையாளர்களில் ஜோசஃபின் லியூ என்பவரும் ஒருவர்.
பாசிர் பாஞ்சாங்கில் உள்ள தமது 30 ஆண்டுப் பழைமையான தரைவீட்டில், எட்டு வாடகை இடங்களை அமைக்க அவர் S$200,000வரை செலவிட்டுள்ளார்.
அந்த இடங்களில் பெரும்பாலானவற்றில் சமையலறை வசதி, குளியலறை, துணி துவைக்கும் இயந்திரம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில், கட்டுப்படியான விலையில், நீக்குப்போக்கான, புதுப்பிக்கப்பட்ட அறைகளுக்கு வலுவான தேவை இருப்பதாகச் சொத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதோடு, பிரபல முன்னணிப் பகிர்வுக் குடியிருப்புச் சொத்து நிறுவனங்களின் வளர்ச்சி, அதிகமான வீட்டு உரிமையாளர்களை இந்த முறையைப் பரிசீலிக்க ஊக்குவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் வீடுகளின் வாடகை கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகரித்துள்ளதை நாம் கண்டுள்ளோம்,” என்று ‘குஷ்மேன் & வேக்ஃபீல்ட்’ (Cushman & Wakefield) நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டாரக் குடியிருப்பு ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஜோஷ் ரோஸ்-நோக்ஸ் தெரிவித்தார்.
“வீட்டு வாடகை கட்டுப்படியான விலையில் இருப்பது மிகவும் முக்கியமானது. தனியார் வாடகைத் துறைக்குள் நுழையும் வாடகைதாரர்களுக்கு ஓர் அறையை வாடகைக்கு எடுக்க கட்டுபடியாகிறது” என்றார் அவர்.

