$1.3 பி. மதிப்பிலான புதுப்பிப்புத் திட்டம்: மரினா பே சேண்ட்சில் கூடுதல் சொகுசு அறைகள்

2 mins read
288ebc44-d51a-46d9-8298-5cead3bcbc93
மரினா பே சேண்ட்சில் புதுப்பிக்கப்பட்டுள்ள சொகுசு அறைகளில் ஒன்று. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிரசித்திபெற்ற ஒருங்கிணைந்த உல்லாசத் தலம் மரினா பே சேண்ட்ஸ், US$1 பில்லியன் (S$1.3 பில்லியன்) மதிப்பிலான அதன் புதுப்பிப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தை இந்த வாரம் நிறைவுசெய்துள்ளது.

அந்த ஹோட்டலில் உள்ள 2,200 அறைகளில் 850க்கும் அதிகமானவற்றுக்கு புதுப்பிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த அந்த ஹோட்டலின் உருமாற்றத் திட்டத்தின்கீழ், கூடுதல் சொகுசு அறைகள் அமைக்கப்படுகின்றன.

ஆண்டிறுதிக்குள் கோபுரங்கள் 1 மற்றும் 2ன் புதுப்பிப்புப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டதும், மரினா பே சேண்ட்சிடம் 422 சொகுசு அறைகள் இருக்கும். தற்போது இந்த எண்ணிக்கை 137ஆக உள்ளது.

அதன் பின்னர் கோபுரம் 3, ஹோட்டலின் வரவேற்பிடம், சேண்ட்ஸ் ஸ்கைபார்க் ஆகிய இடங்களில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, 2.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்து சென்றுள்ளனர். கொவிட்-19க்கு முன்பிருந்த நிலவரத்தில், இது மூன்றில் இரண்டு பங்காகும்.

இந்த உருமாற்றத் திட்டத்தின் மூலம் மரினா பே சேண்ட்ஸ் ஊழியரணியில் மேலும் 1,500 ஊழியர்கள் சேர்க்கப்படக்கூடும்.

இதற்கிடையே, 2024 ஏப்ரலில் $4.5 பில்லியன் மதிப்புடைய விரிவாக்கத் திட்டத்தில் மரினா பே சேண்ட்ஸ் பணியைத் தொடங்கும். 2028 ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும் புதிய கோபுரம், கூடுதலான சொகுசு ஹோட்டல் அறைகளை வழங்கும்.

அதோடு, 15,000 பேர் அமரக்கூடிய நேரடிக் கேளிக்கை இடமும் அந்தக் கட்டடத்தில் இடம்பெறும். கோபுரத்தின் மேற்கூரையில் உணவு, பான வசதிகளும் இடம்பெறும் என்று மரினா பே சேண்ட்சின் தலைமை செயலாக்க அதிகாரி பால் டவுன் ஸ்ட்ரெய்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.