குழந்தை பெற்ற தாய்மார்கள் வெளி இடங்களில் தங்களது பிள்ளைக்குப் பாலூட்டும் வசதியை விரைவில் பெற உள்ளனர். அதற்கேற்ற வகையில் கட்டட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
புதிதாகக் கட்டப்பட இருக்கும் சிறிய கட்டடங்களிலும் பாலூட்டு அறையை அமைக்க விதிமுறை வலியுறுத்தும்.
ஆண்டின் பிற்பகுதியில் கட்டட, கட்டுமான ஆணையத்தின் விதித்தொகுப்புகளில் மாற்றம் செய்யப்படும்போது பாலூட்டு அறை தொடர்பான அம்சம் அதில் இடம்பெறும்.
அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சிறிய கடைத்தொகுதிகளை புதிதாகக் கட்டும்போது அவற்றில் பாலூட்டுவதற்கான வசதியுடன் கூடிய குறைந்தபட்சம் ஓர் அறையாவது அமைக்கப்பட வேண்டும்.
5,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு அதிகமான தரை பரப்பளவு கொண்ட கட்டடங்களுக்கு அந்த விதிமுறை பொருந்தும்.
புதிய கட்டடங்கள் மட்டுமல்லாது, தற்போதைய கட்டடங்கள் பெரிய அளவில் புதுப்பிக்கப்படும்போது அவற்றிலும் பாலூட்டும் வசதிகொண்ட அறை கட்டப்பட வேண்டும் என்று ஆணையம் புதன்கிழமை (பிப்ரவரி 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
கட்டடச் சுற்றுச்சூழல் தொடர்பான ஆணையத்தின் விதித்தொகுப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படுகிறது.
உடற்குறை உள்ளோர், மூத்தோர் மற்றும் இளம் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வசதிகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டுதல்களும் விதிமுறைகளும் மாற்றி அமைக்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
நடப்பில் உள்ள விதித்தொகுப்பு 2019ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது.
10,000 சதுர மீட்டர் தரைப் பரப்பளவு உள்ள கட்டடங்களிலும் கடைத்தொகுதிகளிலும் தாய்மார்கள் பாலூட்டுவதற்கான அறையை அமைக்க வேண்டும் என்று அந்த விதித்தொகுப்பு வரையறுக்கிறது.
இவ்வாண்டு அதனை மாற்றும்போது 5,000 சதுர மீட்டர் பரப்பளவுள்ள சிறிய கட்டடங்களும் அந்த விதிமுறைக்குள் வரும்.
அத்துடன், தற்போதைய விதித்தொகுப்பில் இடம்பெறாத பள்ளிக்கூடங்கள் இம்முறை இடம்பெறும்.
மேலும், கட்டடங்களின் பரப்பளவு அதிகரிப்பதற்கு ஏற்ப பாலூட்டு அறைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், போக்குவரத்து நிலையங்கள், சமூக மன்றங்கள் போன்றவை ஒவ்வொரு 20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கும் ஒரு பாலூட்டு அறையை அமைக்க வேண்டும்.
பாலூட்டு அறையில் இடம்பெற வேண்டிய கட்டாய வசதிகளும் புதிய விதித்தொகுப்பில் சேர்க்கப்படும்.
பூட்டப்படக்கூடிய கதவு, சொகுசான இருக்கை, உடையை சரிசெய்வதற்கு வசதியான கண்ணாடி போன்றவை அவை.
தற்போதைய விதித்தொகுப்பில் அதுபோன்ற கட்டாய அம்சங்கள் எதுவும் இல்லை.

