வீட்டில் யார் தயவுமின்றி வசிக்க உடற்குறையுள்ளோருக்கும் அறிவுத்திறன் குன்றியோருக்கும் கூடுதல் தெரிவுகள் வழங்கப்படுகின்றன,
இதுதொடர்பாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
வாழத்தகுந்த சூழல் திட்டம், வீட்டு ஆதரவுத் திட்டம் ஆகியவை உடற்குறையுள்ளோருக்கும் அறிவுத்திறன் குன்றியோருக்கும் கைகொடுக்கும்.
குறைந்த, மிதமான அளவிலான ஆதரவு தேவைப்படுவோருக்கு இத்திட்டங்கள் பேருதவியாக இருக்கும்.
இத்திட்டங்கள் மூலம், பராமரிப்பாளர் ஆதரவு இல்லாவிட்டாலும் அல்லது வேறு வசிப்பிடம் இல்லாமல் போனாலும் அவர்கள் உடற்குறையுள்ளோர், அறிவுத்திறன் குன்றியோருக்கான நிலையங்களில் தங்க தேவையில்லை.
மாறாக, அவர்கள் தொடர்ந்து தங்கள் வீட்டிலேயே வசிக்கலாம்.
இந்த இரண்டு அறிமுகத் திட்டங்களில் அதிகபட்சம் 250 உடற்குறையுள்ளோர், அறிவுத்திறன் குன்றியோர் பங்கெடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா திங்கட்கிழமை (மார்ச் 10) வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தமது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அவர் இதுகுறித்து பேசினார்.
வீட்டு ஆதரவு திட்டம் மூலம் முதுமையடையும் பராமரிப்பாளர்களுடன் வசிக்கும் உடற்குறையுள்ளவர்கள், அறிவுத்திறன் குன்றியோர் பலனடைவர் என்றார் திரு சுவா.
வேறு தெரிவுகள் இல்லாவிடில் உடற்குறையுள்ளோர், அறிவுத்திறன் குன்றியோருக்கான நிலையத்தில் தங்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படக்கூடும் என்றார் அவர்.
உதாரணத்துக்கு, கண்காணிப்பு மற்றும் நினைவூட்டல் சேவைகள் மூலம் அறிவுத்திறன் குன்றியவர் பலனடையலாம்.
அறிவுத்திறன் குன்றியோர், உடற்குறையுள்ளோரைப் பராமரிப்பவர்கள் இறந்த பிறகு இந்தக் கண்காணிப்பு, நினைவூட்டல், சுயமாக வாழ வழங்கப்படும் பயிற்சி, எதிர்காலத் திட்டம் ஆகியவை பெரிதும் கைகொடுக்கும்.
வீட்டு ஆதரவுத் திட்டம் 2026ஆம் ஆண்டில் தொடங்கும்.
குடும்பத்தினருடன் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு உதவி தேவைப்படும் உடற்குறையுள்ளோருக்கும் அறிவுத்திறன் குன்றியோருக்கும் வாழத்தக்க சூழல் திட்டம் ஆதரவாக இருக்கும்.
அறிமுகத் திட்டத்துக்காக ஒதுக்கப்படும் வீவக வாடகை வீடு ஒவ்வொன்றிலும் இரண்டு பேர் வசிப்பர்.
அன்றாட வாழ்க்கை, அடிப்படை மேற்பார்வை, நிதி உதவி, யார் தயவுமின்றி வாழத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்வது போன்ற உதவி அவர்களுக்கு அந்த வீட்டிலேயே வழங்கப்படும்.
இத்திட்டம் இவ்வாண்டின் பிற்பகுதி தொடங்கும்.
இதற்காக ஒதுக்கப்படும் நான்கு வட்டாரங்கள் இவ்வாண்டு நடுப்பகுதியில் உறுதி செய்யப்படும்.