சிங்கப்பூர்க் கல்விமுறையில், மாணவர்கள் எந்த வயதினரானாலும் தங்களுக்குப் பொருத்தமான கல்வியைத் தேர்ந்தெடுக்கக் கூடுதல் தெரிவுகள் இருக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
மேம்பட்ட நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டம் (DSA), வேலை - கல்வித் திட்டம் போன்றவையும் இவற்றில் அடங்கும்.
இதன் மூலம் மாணவர்கள் ‘சிறந்த’ என்ற நிலையிலிருந்து ‘மிகச் சிறந்த’ எனும் நிலையை எட்ட முடியும் என்றார் திரு சான்.
இந்த ஆண்டுக்கான (2025) கல்வி அமைச்சின் முன்னுரிமைகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் எடுத்துரைத்த அமைச்சர், இது மாணவர்களின் மதிப்பெண்களை உயர்த்துவது தொடர்பானது அன்று, அவர்களின் உள்ளார்ந்த பண்புகளையும் வாழ்க்கைத் திறன்களையும் மேம்படுத்துவது குறித்தது என்றார்.
புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்துக்கு முன்பாக அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு நேர்காணல் அளித்தார்.
தானாகவே கற்றுக்கொள்ளுதல், கண்டுபிடித்தல், புதிய மதிப்பீடுகளைத் தயாரித்தல் போன்ற திறன்களை மாணவர்களிடம் வளர்க்க சிங்கப்பூர் விரும்புவதாக அமைச்சர் சான் கூறினார்.
இந்தப் பண்புகள், வெற்றிக்கான பாரம்பரிய அளவுகோல்களுக்கும் அப்பால் செல்ல அவர்களுக்கு உதவும் என்றார் அவர்.
கல்வி அமைச்சு, நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டத்தை மறுஆய்வு செய்யத் திட்டமிடுகிறது. மாணவர்களுக்குக் கூடுதல் தெரிவுகளை வழங்குவது நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
‘டிஎஸ்ஏ’ திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த மேல்விவரங்கள் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படும் என்றார் அமைச்சர்.
“திறன் மதிப்பீடு என்பது தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வைப் போன்றதன்று. அது மிகத் துல்லியமான மதிப்பீட்டு முறை என்றபோதும் குறுகலானதும்கூட,” என்றார் அவர்.
அதனால்தான், 2004ஆம் ஆண்டு ‘டிஎஸ்ஏ’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பாடங்களுக்கு அப்பால் விளையாட்டு, கலை ஆகியவற்றில் பெற்றுள்ள திறன்களை அங்கீகரிக்கும் இம்முறையின்கீழ் தொடக்கப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர்கள் இறுதியாண்டுத் தேர்வுக்கு முன்பாகவே உயர்நிலைப் பள்ளிகளில் சேர இயலும்.
திறனாளர்களை இளம் வயதிலேயே அடையாளம் காணும் முறையில் உள்ள சிக்கல்களைச் சீர்செய்வதில் மறுஆய்வு கவனம் செலுத்தும் என்றார் திரு சான்.
கல்வி அமைச்சின் மற்றொரு முன்னுரிமை, ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்றவாறு தனிப்பட்ட கற்றல்முறையை அமைத்தல் ஆகும்.
மாணவர்களுக்குப் பல்வேறு கல்விப் பாதைகள் வழங்கப்படும். வேலைசெய்துகொண்டே கற்பதற்கான பட்டயக் கல்வி, பட்டக் கல்வி போன்றவற்றுடன் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் போன்ற பெரிய பல்கலைக்கழகங்களிலும் தனிப்பட்ட முறையில் பாடத்திட்டத்தை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பு போன்றவை அவற்றில் அடங்கும் என்றார் திரு சான்.
இளம் மாணவர்களுக்குத் தேர்வுகளை அகற்றியதன் நோக்கம் அவர்களின் மனஉளைச்சலைக் குறைப்பது மட்டுமன்று. கற்றலுக்கான நேரத்தையும் வாய்ப்பையும் அதிகரிக்கவும் அது உதவும் என்றார் அவர்.
மாணவர்கள் கற்கும் அனைத்தையும் தேர்வு மூலம் சோதிக்கவேண்டும் என்றில்லை. மகிழ்வுடன் கற்றலை ஊக்குவிக்கவும் அறியும் ஆர்வத்தைத் தூண்டவும் விழைகிறோம் என்றார் அமைச்சர்.
ஏட்டுக் கல்வி மட்டுமின்றி கூடுதலான வாழ்க்கைத் திறன்களையும் கற்கத் தூண்டி, வாழ்வில் சிறப்பதற்கான நம்பிக்கையை ஊட்டும் கல்விமுறையின் சிறப்பை அவர் சுட்டினார்.