தானியக்க முறை வந்தபின் சிங்கப்பூருக்குள் நுழைய அதிகமானோருக்கு அனுமதி மறுப்பு

2 mins read
a60b88a2-4dda-4a47-86c3-98ec5be2cd91
சந்தேகத்துக்கு ஆளாகும் பயணிகள் மேலும் கடுமையான சோதனைகளுக்காக நிறுத்தி வைக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தில் தானியக்கக் குடிநுழைவு அனுமதித் தடங்கள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைய அதிகமானோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் இதனை திங்கட்கிழமை (செப்டம்பர் 9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தானியக்க அனுமதி மற்றும் சோதனைகள் முடிவுற்றாலும் இன்னும் விரிவாக ஆய்வு செய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் திருவாட்டி சுன் இந்த விவரங்களை வெளியிட்டார்.

எல்லா வெளிநாட்டினருக்கும் தானியக்க அனுமதி வழங்கப்படுவதன் மூலம் பயணிகள் அல்லாதோரும் சிங்கப்பூருக்குள் நுழைந்துவிடும் அபாயம் உள்ளதா என்று திரு லியோங் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய திருவாட்டி சுன், தானியக்க அனுமதி முறை அமல்படுத்தப்பட்டது முதல் அதிகமானோருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினார். இருப்பினும், எத்தனை பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

ஒவ்வொரு பயணியும் சிங்கப்பூர் வருவதற்கு முன்னதாக, அவர்களைப் பற்றிய விவரங்களையும் அவர்களால் ஏற்படக்கூடிய அபாயங்களையும் ஆராய நவீன தொழில்நுட்பமுறையை குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

சந்தேகத்திற்கு உரியவர்கள், ஆணையத்தால் அதிக அபாயமுள்ளவர் என அடையாளம் காணப்பட்டவர்கள் அடங்கிய பட்டியலுடன் பயணிகளின் விவரங்கள் ஒப்பிட்டு சோதனை நடத்தப்படுவதாகவும் அதில் பிடிபடுபவர்கள் மேலும் கடுமையான சோதனைகளுக்காக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் திருவாட்டி சன் விவரித்தார்.

முன்னதாக, எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகள் வாயிலாக நுழைய ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 2,500 பேருக்கு பல்வேறு காரணங்களால் அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்