சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் பயணிகள் போக்குவரத்து ஜூலை மாதம், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தைக் காட்டிலும் 2.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்கள் அந்த மாதத்தில் 3.7 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றன.
கிழக்கு ஆசியா, ஐரோப்பா, தென்மேற்கு பசிபிக் வட்டாரங்களுக்கான விமானச் சேவைக் கட்டமைப்பு விரிவாக்கம் காரணமாக, குழுமத்தின் பயணிகளை ஏற்கும் திறன் 5.5 விழுக்காடு அதிகரித்தது.
ஜூலை மாதத்திற்கான தனது செயல்பாட்டு முடிவுகள் குறித்துப் பங்குச் சந்தையிடம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) தாக்கல் செய்த அறிக்கையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் இந்த விவரங்களைக் தெரிவித்தது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஏற்ப, ஜூலை மாதம் பயணிகளின் இருக்கைப் பயன்பாட்டு விகிதம் 86 விழுக்காடாக இருந்தது.
அதேபோல, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்களின் மாதாந்தரப் பயணிகளின் இருக்கைப் பயன்பாட்டு விகிதம் முறையே 84.8 விழுக்காடு, 90.2 விழுக்காடு எனப் பதிவாகின.
முதலாம் காலாண்டில் சாதனை அளவாகக் குழுமத்தின் வருவாய் அதிகரித்ததைத் தொடர்ந்து ஜூலை மாதமும் அதன் வளர்ச்சி தொடர்ந்தது.
முதலாம் காலாண்டில் S$5.6 பில்லியன் வருவாயை அந்தக் குழுமம் ஈட்டியது. அந்த மூன்று மாதங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்களை 10.9 மில்லியன் பயணிகள் பயன்படுத்தினர்.
இருப்பினும், மத்திய கிழக்கு மோதல் தொடர்பான எரிபொருள் விலை ஏற்றமும் குழுமம் பங்கு வகிக்கும் ஏர் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பும் சேர்ந்து முதலாம் காலாண்டில் S$76 மில்லியன் நட்டத்தை ஏற்படுத்தின.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு அந்தக் குழுமத்தில் பதிவான காலாண்டு நட்டம் இது.


