சிறப்புத் தேவைகள் கொண்ட சிறுவர்களுக்கு ஆதரவு வழங்குவது அல்லது வகுப்பறையை நிர்வகிப்பது ஆகியவற்றில் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள பயிற்சி மேற்கொள்ளும் பாலர் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள பாலர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கும் தேசிய பாலர் பருவ மேம்பாட்டுக் கழகம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிவைக்கப்பட்டது.
இந்நிலையில், வேலை செய்துகொண்டே பயிற்சி மேற்கொள்ளும் பாலர் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை இருமடங்கிற்கும் அதிகமாக ஏற்றம் கண்டிருப்பதாகக் கழகம் தெரிவித்தது.
2019ஆம் ஆண்டில் 2,400 ஆசிரியர்கள் கழகத்தில் பயிற்சி பெற்றனர்.
இது 2023ஆம் ஆண்டில் 6,200ஆக உயர்ந்தது.
தலைமைத்துவம், வெளிப்புற இடங்களில் கற்றல் நடவடிக்கை, சிறப்புத் தேவைகள் போன்ற பயிற்சிகள் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
இப்பயிற்சிகள் பெரும்பாலும் பிராஸ் பசாவில் உள்ள தேசிய பாலர் பருவ மேம்பாட்டுக் கழக வளாகம், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி, தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றில் நடத்தப்படுகின்றன.
அவற்றில் சில பயிற்சிகள் இணையம் வழி நடத்தப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இணையம் வழி-நேரடிப் பயிற்சி கலவையாகச் சில பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
தேசிய பாலர் பருவ மேம்பாட்டுக் கழகம் கடந்த மூன்று ஆண்டுகளாக அதன் முழுநேர பட்டயச்சான்றிதழ் தகுதி பயிற்சிகளில் ஒவ்வோர் ஆண்டும் 2,500 பேரைச் சேர்த்துக்கொண்டது.
மூன்றில் இருவர் பாலர் பருவத் துறைக்குப் புதியவர்கள்.
குழந்தைப் பருவத்திலிருந்து 3 வயதுக்கும் உட்பட்டோருக்குக் கல்வி கற்பிக்க ஆர்வம் கொண்டோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதைக் கழகம் சுட்டியது.
பாலர் கல்வி கற்பித்தல் திறன்களை வளர்த்துக்கொள்ள பயிற்சி மேற்கொள்ளும் ஆசிரியர்களில் 30 வயது திருவாட்டி கிறிஸ்டின் செயிண்ட் நைட்டும் ஒருவர்.
இவர் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை கழகத்தின் பிராஸ் பசா வளாகத்தில் பயிற்சி மேற்கொண்டு பாலர் பருவத் துறை தொடர்பான உயர் சான்றிதழைப் பெற்றார்.
அதற்கு முன்பு ஜூரோங்கில் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்துகொண்டிருந்த திருவாட்டி கிறிஸ்டின், பயிற்சிக்குப் பிறகு புளோக் 337 கேன்பராவில் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளிக்கு முழுநேர பாலர் பள்ளிக் கல்வியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் பல பயிற்சிகளை மேற்கொள்ள விரும்புவதாக அவர் கூறினார்.
“இத்துடன் நிறுத்துக்கொள்ளப்போவதில்லை. ஐந்திலிருந்து பத்து ஆண்டுகளுக்குள் உயர் பதவி வகித்து தலைமைத்துவப் பொறுப்புகள் கொண்டவராகத் திகழ்வதே எனது இலக்கு,” என்று திருவாட்டி கிறிஸ்டின் தெரிவித்தார்.