தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் திட்டத்தில் கூடுதல் பாலர் பள்ளிகள்

2 mins read
6cbe9193-c2d9-445c-90bb-6e4de657e6f6
‘தி மி‌ஷன் ஐஅம்பாசிபிள் 2’ திட்டத்தின் மூலம் திரு அஸிர்வான் மஸ்தான், திருவாட்டி நூர்தியானா அப்துல் ரஹிம் தம்பதியரின் மகன் ஆஃபி உதவி பெற்றார். - படம்: சாவ்பாவ்

இளம் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவும் திட்டமொன்று விரிவுபடுத்தப்படவிருக்கிறது. அடுத்த ஆண்டு (2026) ஜனவரியிலிருந்து கூடுதல் பாலர் பள்ளிகளுக்கு அது கொண்டுசெல்லப்படும்.

சில குழந்தைகள் வளரும்போது உதவி தேவைப்படக்கூடும். அத்தகையோரின் உடல் வளர்ச்சியையும் பல் சுகாதாரத்தையும் கண்காணிக்கிறது அந்தத் திட்டம்.

‘தி மி‌ஷன் ஐஅம்பாசிபிள் 2’ எனும் திட்டத்திற்கு லியென் அறநிறுவனம் நிதியாதரவு அளிக்கிறது. அதற்கென $5.9 மில்லியனை அறநிறுவனம் ஒதுக்கியுள்ளது. 2022ஆம் ஆண்டிலிருந்து செங்காங்கிலும் பொங்கோலிலும் மசெக சமூக அறநிறுவனத்தின் (பிசிஎஃப்) 16 ஸ்பார்க்கிள்டோட்ஸ் பாலர் பள்ளிகளில் உள்ள 3,500 பிள்ளைகளுடன் அது பணியாற்றிவருகிறது.

அறநிறுவனம் அதன்கீழ் செயல்படும் கிட்டத்தட்ட 350 பாலர் பள்ளிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த எண்ணியுள்ளது.

பாலர் பள்ளிகளை நடத்துகின்ற மேலும் இரண்டு நிறுவனங்களும் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்ப்பஸ், கிரெஸ்டர் கல்விக் குழுமம் ஆகியவையே அந்த நிறுவனங்கள். என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்ப்பஸ் நிறுவனத்தின்கீழ் மை ஃபர்ஸ்ட் ஸ்கூல், லிட்டில் ஸ்கூல்-ஹவுஸ் ஆகிய பாலர் பள்ளிகள் இயங்குகின்றன. கிரெஸ்டர் கல்விக் குழுமத்தின்கீழ் ஸ்கூல்ஃபோர்கிட்ஸ் பாலர் பள்ளிகள் செயல்படுகின்றன.

குழந்தைப் பராமரிப்பு நிலையத்திலிருந்து மழலையர் இரண்டாம் வகுப்புவரை பயிலும் பிள்ளைகள், திட்டத்தின் மூலம் பலன் பெறுகின்றன. குழந்தைகளின் வளர்ச்சியில் ஆரம்பத்திலேயே தலையிட்டு உதவும் நிபுணர்கள், பாடத்திட்ட வல்லுநர்கள், உடற்பயிற்சி-வழி சிகிச்சை வழங்குவோர், சத்துணவு நிபுணர்கள், தாதியர் முதலியோர் அடங்கிய குழு திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது.

பாலர் பள்ளி முதல், இரண்டாம் வகுப்புகளில் பயிலும் பிள்ளைகளுக்கு தேசிய அளவிலான வளர்ச்சி, கற்றல் ஆதரவுத் திட்டம் கைகொடுக்கும்.

தற்போது பாலர் பள்ளிகளில் பயிலும் ஏறக்குறைய 60 விழுக்காட்டுப் பிள்ளைகள் திட்டத்தில் சேரலாம். திட்டம், 80 விழுக்காட்டினருக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்ப்பதிலும் கேட்பதிலும் பிரச்சினை, வழக்கத்திற்கு மாறான கண்களின் அசைவு, இயங்குவதில் தாமதம் முதலிய சிக்கல்களைச் சில பிள்ளைகள் எதிர்கொள்ள நேரிடலாம். அவற்றை முறையான தலையீட்டுத் திட்டங்கள் மூலம் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடிந்தால், அவர்கள் பலன் பெறக் கூடுதல் அவகாசம் இருக்கும். அவற்றுள் ஒன்று சிசுக்கள், மழலைகளுக்கான ஆரம்பத் தலையீட்டுத் திட்டம்.

‘தி மி‌ஷன் ஐஅம்பாசிபிள் 2’ திட்டத்தின்வழி பயன்பெற்ற ஒருவர் 18 மாதம் நிறைந்த ஆஃபி அஸிர்வான். பிறந்து ஒன்பது மாதமானபோது, உட்கார்ந்த நிலையில் அவரின் தலை உறுதியாக நிற்கவில்லை. அதனால் அவருக்கு உணவூட்டுவது சிரமமாக இருந்தது. அப்போது சிறப்பு இருக்கையொன்று அவருக்கு வழங்கப்பட்டது. இரண்டே மாதத்தில் தனியாக அதில் அமர்ந்து ஆஃபியால் உணவு உட்கொள்ள முடிந்தது.

அதிலிருந்து அவர் இயங்குவது மேம்பட்டதாகவும் அது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாகவும் அவரின் தந்தை அஸிர்வான் மஸ்தானும் தாயார் நூர்தியானா அப்துல் ரஹிமும் கூறினர்.

கிட்டத்தட்ட 15 மாதத்தில் நடக்கத் தொடங்கிய ஆஃபி, இப்போது ஆரோக்கியமாகப் பெற்றோருடன் வலம் வருகிறார்.

குறிப்புச் சொற்கள்