அதிகமான பாலர்பள்ளிகள் மூன்று தாய்மொழிப் பாடங்களையும் வழங்குகின்றன

அதிகமான பாலர்பள்ளிகள் மூன்று தாய்மொழிப் பாடங்களையும் வழங்குகின்றன

2 mins read
43931da7-7947-432b-9295-926aeccfbf8c
மலாய் பிள்ளைகளுக்குத் தமது சொந்தக் கதைப் புத்தகத்தை எழுதி வடிவமைத்தது குறித்து தமது வகுப்பில் பகிர்ந்துகொள்கிறார் திருவாட்டி டீனா. - படம்: டீனா ஷக்கிலா

சிங்கப்பூரில், அதிகமான பாலர்பள்ளிகள் தற்போது மூன்று தாய்மொழிப் பாடங்களையும் வழங்கி வருகின்றன.

ஆரம்பக்கால இருமொழித் திறனை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிகமான நிபுணத்துவ ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இவ்வாண்டு மார்ச் மாத நிலவரப்படி, 270 பாலர்பள்ளிகள் மூன்று தாய்மொழிகளையும் வழங்குகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டில் 160ஆக இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும், அது 70 விழுக்காடு அதிகம் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.

மேலும் 270 பாலர்பள்ளிகள் இரு தாய்மொழிகளையும், எஞ்சியவை ஒரு தாய்மொழியையும் வழங்குகின்றன.

தாய்மொழிப் பாடங்கள் வழங்கப்படுவது அதிகரித்துவரும் நிலையில், கல்வியாளர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. இன்று, பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் உரிமம் பெற்ற 1,800 பாலர்பள்ளிகளிலும் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளிலும் கிட்டத்தட்ட அனைத்திலும் குறைந்தது ஒரு தாய்மொழிப் பாடம் வழங்கப்படுகிறது.

தற்போது, 18,500 பாலர் பருவக் கல்வியாளர்கள் உள்ளனர். அவர்களில் 80 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து, அந்த எண்ணிக்கை நிலையாக இருந்துவருகிறது.

பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் மூலம் அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் திட்டம் உள்ளதாக அமைப்பு கூறியது. இவ்வாண்டு ஏப்ரல் மாதம், அந்தத் துறையைச் சார்ந்த முதல் தொகுதி மாணவர்கள் பட்டம்பெறுகின்றனர்.

தாய்மொழித் துறையில் ஆர்வம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து முதல் தொகுதி மாணவர்களைச் சேர்த்துக்கொண்டதைத் தொடர்ந்து, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியும் அவற்றின் வகுப்புகளை விரிவுபடுத்தியுள்ளன.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சீனம், தமிழ் மொழிகள், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மலாய் மொழி ஆகியவை, பாலர் பருவ மேம்பாட்டுக் கல்வித் துறையில் பட்டயக் கல்வி பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பாலர்பள்ளித் துறையில் பயிற்சிகளைத் தரப்படுத்த, கடந்த 2019ஆம் ஆண்டில், தேசிய பாலர் பருவ மேம்பாட்டுக் கழக வளாகம் அந்தப் பட்டயக் கல்வியை அறிமுகப்படுத்தியது. பின்னர், அதில் தாய்மொழிப் பாடங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வழங்கப்படும் தமிழ்மொழி வகுப்பில் சிறு அளவிலான மாணவர்கள் உள்ளனர். அங்கு, தமிழ்க் கல்வியுடன் கூடிய ஆரம்பக்கல்வி பாடத்திட்டத்திலும் மாணவர்கள் உள்ளதே அதற்குக் காரணம் என்று தேசிய பாலர் பருவ மேம்பாட்டுக் கழக வளாகம் கூறியது.

இந்நிலையில், தமிழ் கற்பிப்பது என்பது கலாசாரங்களை இணைப்பது பற்றியதாகும் என்றும் இங்குள்ள தமிழ்மொழிக் கல்வியாளர்களுக்கான பற்றாக்குறையைச் சரிசெய்ய உதவுவதாகும் என்றும் கூறுகிறார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வழங்கப்படும் தமிழ்மொழி வகுப்பில் பயிலும் 23 வயது பூர்வீகா.

“எனக்குத் தமிழ்மொழிமீது எப்போதுமே பேரார்வம் இருந்துள்ளது. இந்த மொழிக்கான ஆர்வத்தையும் அதன் பயன்பாட்டையும் பரப்ப விரும்புகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்