தொடக்கப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மீத்திறன் கல்வித் திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று கல்வி அமைச்சு திங்கட்கிழமை அதன் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது.
தேர்ந்தெடுக்கப்படும் மீத்திறன் மாணவர்கள், தொடக்கநிலை நான்கிலிருந்து மீத்திறன் கல்வித் திட்டத்தின்கீழ் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போதைய அணுகுமுறையின்கீழ் இந்தத் திட்டம் சிங்கப்பூரில் ஒன்பது தொடக்கப் பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் பள்ளி முடிந்து வேறொரு பள்ளிக்குச் சென்று மீத்திறன் கல்வித் திட்டத்தின்கீழ் உள்ள பாடங்களைப் பயின்று வருகின்றனர்.
இனி, சிங்கப்பூரில் இருக்கும் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். புதுப்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் மாணவர்கள் அவர்களின் தொடக்கப்பள்ளியில் இருந்தவாறு அப்பாடங்களைப் பயிலலாம்.
தங்களுக்குப் பிடித்தமான பாடங்களை ஆழ்நிலையில் கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் இந்தத் திட்டத்தில், ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் 10 விழுக்காட்டினர் பயன்பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. இது முன்பைவிட மூன்று விழுக்காடு அதிகம்.
இந்த ஆண்டு தொடக்கப் பள்ளி ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள், தொடக்கப்பள்ளி நான்கு பயிலத் தொடங்கும்போது அவர்கள் மீத்திறன் கல்வித் திட்டப் பாடங்களைக் கற்க வேறொரு பள்ளிக்குச் செல்லத் தேவையில்லை. கூடுதல் மாணவர்களுக்குப் பலன் தரும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திடும்.
மேலும், மீத்திறன் கல்வித் திட்டத்தின்கீழ் இருக்கும் பாடங்களுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் குறிப்பிட்ட சில பாடங்களில் அதிகளவில் கவனம் செலுத்த விருப்பம் இருந்தால் அவர்கள் அருகில் இருக்கும் குறிப்பிட்ட சில பள்ளிகளில் பள்ளி நேரத்துக்குப் பிந்திய பாடத்தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
இதன்மூலம் மாணவர்கள் இதர பள்ளிகளில் இருக்கும் மாணவர்களுடன் பிணைப்பையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். எந்தெந்த பள்ளிகளில் இத்திட்டம் செயல்படும் என்பதற்கான கூடுதல் தகவல்களைக் கல்வி அமைச்சு பின்னர் அறிவிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
மீத்திறனாற்றலுடைய மாணவர்களுக்கு நீக்குப்போக்கான கல்விச் சூழலை அமைத்துத் தரும் விதமாக மாணவர்கள் தொடக்கப் பள்ளி நான்கில் மீத்திறன் கல்வித் திட்டத்தில் சேர்ந்த பின்னர் இடைவெளி விட விரும்பினாலும் அவர்களால் மீண்டும் அத்திட்டத்தில் சேர்ந்துகொள்ள முடியும்.
இதன் மூலம் இணைப்பாட நடவடிக்கைகள் மேல் அதிக ஆர்வம் இருக்கும் மாணவர்களால் கல்விக்கும் இதர நடவடிக்கைகளுக்கும் நேரத்தை நன்கு வகுத்துக்கொள்ள முடியும். அதோடு, பாடச் சுமை அதிகமாக இருந்தாலும் அவர்கள் இடைவெளி எடுத்த பிறகு மீண்டும் மீத்திறன் கல்வித் திட்டத்தில் சேரலாம்.
மீத்திறன் கொண்ட மாணவர்களைக் கல்வித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையும் மேலும் முழுமை பெறவுள்ளது. தற்போது அம்மாணவர்கள் இரண்டு கட்டத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இனி தேர்வுத் திட்டம் ஒரு கட்டத்திற்குக் குறைக்கப்படும். ஆசிரியர்களும் மாணவர்களின் தனிப்பட்ட செயலாக்கத்தைக் கண்டறிந்து அவர்களை மீத்திறன் கல்வித் திட்டத்திற்குப் பரிந்துரைக்கலாம்.
தற்போதைய மீத்திறன் கல்வித் திட்டம், அடுத்த ஆண்டு தொடக்கநிலை மூன்றாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுடன் முடிவடையும். அவர்கள் 2026ல் தொடக்கநிலை நான்காம் வகுப்புக்குள் நுழைந்த பின்னர் வேறொரு பள்ளிக்குச் சென்று மீத்திறக் கல்வித் திட்டப் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் கடைசி ஆண்டு மாணவர்களாவர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை பேசிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங், “எந்தக் காலகட்டத்தில் வேண்டுமானாலும் ஒரு பிள்ளை குறிப்பிட்ட பாடத்தின் மீது அதிக ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்கலாம். அதனால் தொடக்கப் பள்ளி மூன்றாம் வகுப்பிலேயே தேர்வுகளை வைத்து மாணவர்களை மீத்திறன் கல்வித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையை நாம் மாற்ற முடிவெடுத்தோம். மீத்திறன் கல்வித் திட்டத்தில் சேர்வதற்கான தேர்வுகளைத் தொடக்கநிலை மூன்றாம் வகுப்பில் தவறவிட்ட மாணவர்கள், எப்போது வேண்டுமானாலும் அவர்களின் ஆற்றலை வெளிக்காட்டி திட்டத்தில் சேரலாம்,” என்று தெரிவித்தார்.
மீத்திறன் கொண்ட மாணவர்களைப் பற்றிப் பேசிய அமைச்சர், “பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை மீத்திறன் கல்வித் திட்டத்திற்குத் தயார்படுத்த வேண்டும் என்பதற்காக பிள்ளைகளை அதிக கல்வி அழுத்தத்திற்கு உட்படுத்தக்கூடாது. பிள்ளைகள் இயல்பாகவே பாடத்தின் மீது ஆற்றலை வளர்க்க வேண்டும். மீத்திறன் கல்வித் திட்டத்தில் பாடங்கள் கற்பிக்கப் போதுமான வளங்கள் உள்ளன. ஆசிரியர்களும் அதற்குத் தயார்படுத்தப்படுகிறார்கள்,” என்றார்.
“அதுபோல தாய்மொழிப் பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்கள், அவர்களின் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் ஒட்டுமொத்தமாகச் சிறந்த தேர்ச்சி பெறாமல் இருந்தாலும், தாய்மொழிப் பாடத்தில் சிறந் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களால் உயர்நிலைப் பள்ளியில் உயர் தாய்மொழிப் பாடத்தைப் பயில முடியும்,” என்று கல்வி அமைச்சர் இருமொழிக் கற்றலைப் பற்றித் தமது உரையில் வலியுறுத்தினார்.

