சுயதீவிரவாதப் போக்கை நாடிய வகையில் கூடுதலானோர் சிங்கப்பூரில் பிடிபட்டுள்ளனர். எனவே, பயங்கரவாதத் தாக்குதலுக்கு சிங்கப்பூரர்கள் மனத்தளவில் தங்களை தயார்செய்து கொள்ள வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) கூறியுள்ளார்.
அண்மையில், பதின்ம வயதினர் ஒருவர், இல்லத்தரசி, துப்புரவாளர் என மூவர் மீது உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிட்டது கவலை தரும் போக்கு என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு தைப்பூச விழாவை ஒட்டி, தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“தீவிர வலதுசாரி சித்தாந்தத்திற்கு எதிராக மூன்றாவது நபர் மீது தற்பொழுது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவர் இனப் பிரச்சினை தொடர்பாக பல்வேறு குப்பைப் பிரசுரங்களை படித்துவிட்டு தன்னை தீவிர வலதுசாரி ஆதிக்கவாதியாக மாற்றிக்கொண்டுள்ளார்,” என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
அந்த 18 வயதுப் பையன் இணைய விளையாட்டு ஒன்றில் தன்னைப் பயங்கரவாதியாக உருவகப்படுத்திக் கொண்டான் என்றும் அவன் சீனர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையே இனப் போரை தொடங்கி வைக்க விருப்பம் கொண்டிருந்தான் என்றும் திரு சண்முகம் கூறினார்.
அவன் நியூசிலாந்தின் இரண்டு பள்ளிவாசல்களில் 2019ஆம் ஆண்டு 51 பேரைக் கொன்ற வெள்ளையின ஆதிக்கப் போக்குடைய ஆஸ்திரேலியரான பிரன்டன் டராண்ட்டை பின்பற்றினான் என்று அமைச்சர் விளக்கினார்.
அந்தப் பதின்ம வயது நபர் சிங்கப்பூர் பள்ளிவாசல் ஒன்றில் முஸ்லிம்களைத் தாக்க எண்ணியிருந்தான். அத்துடன், அவன் நாஸி, வெள்ளையின தீவிர வலதுசாரிப் பிரிவினரின் முத்திரை அடையாளத்தை பிரத்தியேகமாக தனது டி-சட்டைகளில் அச்சிட்டு வைத்திருந்தான் என்று அமைச்சர் விளக்கினார்.
அவனுக்கு எதிராக 2024 டிசம்பரில் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திங்கட்கிழமை (பிப்ரவரி 10) தெரிவித்திருந்தது.
மேலும், இஸ்லாமிய பயங்கரவாதப் போராளிக் குழுக்களை ஆதரித்த இல்லத்தரசி, துப்புரவாளர் ஆகியோர் மீதும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக திரு சண்முகம் கூறினார்.
இல்லத்தரசிக்கு எதிராக கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் மலேசியரான துப்புரவாளர் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.