பழுதுபார்க்கும் பணிகளுக்காக அதிக ரயில் பாதைகள் மூடப்படலாம்: ஜெஃப்ரி சியாவ்

2 mins read
e05a7ef9-12a4-4c19-96fa-b5a3e969e2b2
ரயில் பாதைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளும்போது ஏற்படும் தாமதங்களைப் பயணிகள் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கேட்டுக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரயில் கட்டமைப்பின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரயில் பாதைகளில் நீண்டநேர, திட்டமிட்ட செயல்பாட்டு நிறுத்தம் மேற்கொள்ளவிருப்பதால் அதிக ரயில் பாதைகள் மூடப்படலாம் எனத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.

பராமரிப்புப் பணிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள இது வழிவகுக்கும் என அவர் மேலும் கூறினார்.

புதன்கிழமை (நவம்பர் 19), பொதுப் போக்குவரத்து நிறுவனமான ‘எஸ்பிஎஸ்’ டிரான்சிட் ஏற்பாடு செய்த அனைத்துலக விரைவு ரயில் நிறுவனங்களுக்கான மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

700க்கும் மேற்பட்ட உலகளாவிய ரயில் நிபுணர்கள் கலந்துகொண்ட அந்நிகழ்வில் பேசிய அமைச்சர் சியாவ், பராமரிப்பு நேரத்தை அதிகரிக்க, நிலையங்களை முன்கூட்டியே மூடுவது, தாமதமாகத் திறப்பது போன்ற செயல்பாட்டு நேரத்தைக் குறைக்கும் நடவடிக்கை ரயில்கள் திறம்பட செயலாற்ற போதுமானதாக இல்லை என்றார்.

“சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பு மூப்படைவதால், அதிக பராமரிப்பு நேரம் தேவைப்படும் பெரிய மேம்பாடுகளுக்கு அந்நேரத்தை ஒதுக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்,” என மரீனா பே சாண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு நிலையத்தில் நடந்த மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “பெருவிரைவு ரயில் கட்டமைப்பு மிகவும் சிக்கலானது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல பகுதிகள் மூலம் அது உருவாக்கப்பட்டது,” என அமைச்சர் கூறினார்.

தற்போது மேம்பாட்டுப் பணிகள் இரவுதோறும் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக எடுத்துரைத்த அமைச்சர், இரவில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நேரத்திற்குப் பிறகு தொடங்கி, ரயில் சேவை மீண்டும் தொடங்கும்போது அது முடிவடைகிறது என்றார்.

ரயில் பாதைகளைப் பழுதுபார்க்கவும் பெரிய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் போதுமான நேரம் தேவை எனத் திரு சியாவ் தெரிவித்தார்.

ரயில் பாதைகளைத் திட்டமிட்டு மூடும்போது பழுதுபார்க்கும் பணிகளையும் இதர நடவடிக்கைகளையும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் முடிக்க முடியும் எனக் கூறிய அமைச்சர், பணிகள் சீராக நடக்க பயணிகளின் ஒத்துழைப்பும் அவசியம் என அறிவுறுத்தினார்.

பயணிகள் அதைப் புரிந்துகொள்ளுமாறு அமைச்சர் சியாவ் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்